பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1008 பால்குடம் அபிஷேகம்

பூந்தமல்லி: வெயிலின் தாக்கம் குறைந்து, மழை பொழிந்து நாடு முழுவதும் செழிப்புறவும், மக்கள் நலமுடன் வாழவும் பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1008 பால்குடம் அபிஷேகம் நடந்தது.
பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் மிகவும் பழமையான, ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் உள்ளது. இங்கு 30ம் ஆண்டு ஆடி மாத திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து அம்மன், சாமுண்டீஸ்வரி, துர்க்கை, மகாலட்சுமி, கருமாரி, சரஸ்வதி, கம்பாநதி, கர்ப்பிணி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 7ம் நாளான நேற்று 1008 பால்குடம் அபிஷேகம் நடந்தது.

இதில், காட்டுப்பாக்கம் வேம்புலி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் 1008 பால்குடங்களை தலையில் சுமந்தபடி மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் ஊர்வலமாக சென்று, கோயிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். நாடு முழுவதும் மழை பொழிந்து செழிப்படைய இந்த சிறப்பு பாலாபிஷேகம் அம்மனுக்கு நடத்தப்பட்டது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன.
விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா பூவை எம்.ஞானம், நிர்மலா ஞானம், பிரேம்குமார் மற்றும் குடும்பத்தினர், விழா குழுவினர், உபயதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாஜ மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், பசுமை தாயகம் அமைப்பு தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மனுக்கு 1008 பால்குடம் அபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: