ஈரோட்டுக்கு ஆற்றிலேயே வருகிறேன் என கூறி காவிரியில் குதித்த விவசாயி மாயம்


பவானி: ஈரோடு மாவட்டம் பவானி, அம்மாபேட்டை அருகே செம்படாபாளையம் ஏரங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் கந்தசாமி (59). விவசாயி. இவர் பந்தல் போடும் தொழிலும் செய்து வருகிறார். மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட இவர் பதற்றம் மற்றும் படபடப்பு காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், சரிவர தன்னால் வேலை செய்ய முடியவில்லை என்று மனைவியிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில், ஈரோட்டில் வசித்து வரும் இவரது மகள் சாந்தி, மருத்துவ பரிசோதனைக்கு ஏன் வரவில்லை என தந்தை கந்தசாமியிடம் கேட்டுள்ளார். இதற்கு, நான் காவிரி ஆற்றிலேயே ஈரோடு வருகிறேன் என்று கூறி போனை துண்டித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கோனேரிப்பட்டி கதவணை நீர் மின் நிலையத்திற்கு சென்ற கந்தசாமி, பாலத்தில் ஏறி காவிரி ஆற்றில் குதித்து விட்டார். வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்க்க திரண்டிருந்த பொதுமக்கள் முன்னிலையில் கந்தசாமி ஆற்றில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆற்றில் விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் ஓடிய நிலையில், குதித்த வேகத்தில் தண்ணீரில் மூழ்கிய கந்தசாமி அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானார். புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஈரோட்டுக்கு ஆற்றிலேயே வருகிறேன் என கூறி காவிரியில் குதித்த விவசாயி மாயம் appeared first on Dinakaran.

Related Stories: