துபாய், சிங்கப்பூர், இலங்கையில் இருந்து விமானங்களில் கடத்திவந்த ரூ.5.6 கோடி தங்கம் பறிமுதல்: சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு

மீனம்பாக்கம்: துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திவந்த ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை சென்னை விமானநிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 9 பயணிகளை கைது செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்தியாவின் நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில், தங்கத்துக்கான இறக்குமதி வரி வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை கணிசமாக குறைந்தது. எனினும், அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை படிப்படியாக உயரத் துவங்கிவிட்டது. மேலும், இந்தியாவில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவது குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்தியாவில் தங்கத்தின் சில்லறை விற்பனை விலை படிப்படியாக உயரவே, தற்போது தங்களின் தொழிலை கடத்தல் ஆசாமிகள் மீண்டும் துவங்கிவிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக நேற்றிரவு சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் நேற்று நள்ளிரவு முதல் மத்திய வருவாய் புலனாய்வு துறையின் தனிப்படையினர், வெளிநாடுகளில் இருந்து பயணிகளின்மீது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது சிங்கப்பூரில் இருந்து ஒரு தனியார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை வருவாய் புலனாய்வு தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர். அவர்களில் 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். மேலும், அவர்களை தனியறைக்கு கொண்டு சென்று, அவர்களின் உடல் பாகங்களை ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். மேலும், அவர்களின் உடைமைகள் மற்றும் கைப்பைகள் சோதனையிடப்பட்டன.

அவர்களை முழுமையாக சோதனை செய்தபோது, அவர்களின் உள்ளாடைகள் மற்றும் கைப்பைகளில் இருந்த ரகசிய அறைகள் மூலம் தங்கக் கட்டி, பேஸ்ட் மற்றும் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்திருப்பதை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படையினர் கண்டறிந்தனர். அவர்களிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அடுத்து வரும் துபாய் மற்றும் இலங்கை ஆகிய 2 விமானங்களில் கடத்தல் குருவிகள் மூலம் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாகத் தனிப்படையினருக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து துபாய் மற்றும் இலங்கை நாடுகளில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளை தனிப்படையினர் தீவிரமாக கண்காணித்தனர்.

அதில் சந்தேகிக்கும் நிலையில் இருந்த 6 பேரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவர்களின் கைப்பை மற்றும் உள்ளாடைகளில் இருக்கும் ரகசிய அறைக்குள் வைத்து பெருமளவிலான தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருப்பது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தனிப்படையினருக்குத் தெரியவந்தது. அந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்து, 6 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.சென்னை விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு முதல் துபாய், சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய 3 விமானங்களில் வந்திறங்கிய 9 பயணிகளிடம் இருந்து மொத்தம் ரூ.5.6 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 9 பயணிகளை கைது செய்து, சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று, அங்கு 9 பேரிடமும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

The post துபாய், சிங்கப்பூர், இலங்கையில் இருந்து விமானங்களில் கடத்திவந்த ரூ.5.6 கோடி தங்கம் பறிமுதல்: சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: