தா.பழூர் அருகே கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கியில் வெள்ள அபாய எச்சரிக்கை

தா.பழூர், ஆக. 1: தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிளில் கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக கொட்டித் தீர்ப்பதால் கர்நாடகவின் கே. ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகளிலிருந்து உபரி நீர் அதிகளவில் வௌியேற்றப்படுவதால், மேட்டூர் அணை நிரம்பி, முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டி, மேட்டூர் அணையிலிருந்த பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் எந்த நேரமும் வெள்ளம் வரலாம் என்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, காவிரி, கொள்ளிடம் கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, மாடுகளை குளிப்பாட்டவோ, துணி துவைக்கவோ காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்குச் செல்ல வேண்டாம் என திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

எனினும் கிராமங்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில், தா.பழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிளான தென்கச்சிபெருமாள் நத்தம், கீழக்குடிகாடு, மேலகுடிகாடு, அடிக்காமலை, அண்ணங்காரன் பேட்டை, கோடாலி கருப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதில், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவள்ளி ஆறுமுகம், ஊராட்சி செயலாளர் சசிகுமார், சுகாதார ஊக்குநர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் சுந்தரம், உதவியாளர் ஜான்சிராணி ஆகியோர் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

The post தா.பழூர் அருகே கொள்ளிடம் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கியில் வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: