அரசு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி

ஈரோடு, ஆக.1: ஈரோடு அரசு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். ஈரோடு, அரசு பல்நோக்கு சிறப்பு உயர் சிகிச்சை மைய வளாகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ துறை சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தாய்ப்பால் வங்கி மற்றும் நோயாளிகளுடன் உடன் வருவோர் அமரும் அறை ஆகியவை திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம், இணை இயக்குனர் (மருத்துவம்) அம்பிகா சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு தாய்ப்பால் வங்கியை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் ரோட்டரி அமைப்பு சார்பில் தாய்ப்பாலை சேகரித்து, பாதுகாத்து தேவையானவர்களுக்கு தேவையான இடங்களுக்கு வழங்க தாய்ப்பால் வங்கிக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். இங்கு சேகரிக்கப்படும் தாய்ப்பால் ஓராண்டுகாலம் பாதுகாத்து, மற்றவர்களுக்கு வழங்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே, இந்த வசதி உள்ளது. தற்போது, ஈரோட்டில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இங்கு 1,000 லிட்டர் சேமித்து வைக்கப்படும் வசதி உள்ளது. கூடுதலாக சேமிக்கும் வசதி வரும் நாட்களில் ஏற்படுத்தப்படும்.

1,000 லிட்டரை, ஒரு ஆண்டுக்கு பாதுகாக்க இயலும். தேவையான அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக வழங்கப்படும். பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டடத்தில் தேவையான கருவிகள், அடிப்படை வசதிகள், டாக்டர்கள் காலிப்பணியிடங்கள் ஆகியவை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கள் விற்பனை செய்வது, ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது குறித்து கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இதுபற்றி, ஆய்வு செய்து தெரிவிக்கப்படும்.
அமைச்சர் உதயநிதி இன்று (1ம் தேதி) இரவு ஈரோட்டுக்கு வருகிறார். நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி appeared first on Dinakaran.

Related Stories: