ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு


சென்னை: பெரம்பூரில் கடந்த மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை போலீசார் 21 பேரை கைது செய்துள்ளனர். முதலில் பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது தப்பித்து ஓடியபோது திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன் பிறகு பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு என்ற வினோத் ஆகிய 3 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இதில் ஹரிஹரனை மட்டும் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். இவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசாருக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

அதன் அடிப்படையிலும் சிலரை போலீசார் கைது செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், பண உதவி செய்தவர்கள் என பலரையும் போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வெடிகுண்டுகளை கொண்டு வந்து கொடுத்ததாக அப்பு, ராஜேஷ் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சம்பவ செந்தில் ஆகியோரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் போலீசாருக்கு மேலும் சில தகவல்கள் தேவைப்படுவதால் வழக்கில் முக்கிய நபர்களான பொன்னை பாலு, அருள், ராமு என்ற வினோத், ஹரிதரன், சிவா ஆகிய 5 பேரை மீண்டும் செம்பியம் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஹரிதரன் மற்றும் சிவா ஆகிய இருவரையும் இதுவரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. விரைவில் இவர்களை காவலில் எடுக்கும் பணிகள் தொடங்கப்படும் என தெரிய வருகிறது. இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போது இந்த வழக்கில் மேலும் சில உண்மைகள் தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: