மகாவிஷ்ணு கைது விவகாரம்

* பள்ளிகளில் மூடநம்பிக்கையை தமிழக அரசு தடுக்க வேண்டும்: -திருமாவளவன்

புதுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய மகா விஷ்ணு கைது ஏற்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய விவகாரத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் இருக்கக்கூடாது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுமே துவங்கும்போது பல பிரச்னைகளை சந்திப்பது வழக்கம். நடிகர் விஜய் கட்சியின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெற்றிமாறன், ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் ஜாதி பெருமையை பேசக்கூடிய படங்களை எடுப்பதில்லை. சாதிய கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கும், விவாதத்துக்கு உள்ளாக்கும் கருப்பொருளை மையமாக வைத்து தான் படங்களை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஜாதிய பாகுபாடுகள் 99 சதவீதம் இன்னும் அப்படியே தான் உள்ளது. ஒரு சதவீதம் தான் நாம் பேச துவங்கியுள்ளோம். இந்திய அளவில் இந்த விவாதம் விரிவடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* சட்டம் கடமையை செய்துள்ளது: -செல்வப்பெருந்தகை

புதுக்கோட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது நல்லாட்சி நடப்பதால் அதை காமராஜர் ஆட்சி என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் தற்போது நடப்பது நல்லாட்சி என்பதில் சந்தேகம் இல்லை. எங்கெல்லாம் நல்லாட்சி நடக்கிறதோ அதற்கு பெயர் தான் காமராஜர் ஆட்சி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்போது நல்ல விஷயங்களை பேசியுள்ளார்.

அவர் பேசும் விஷயங்கள் எல்லாம் பிரச்னைக்கு உரியதாகவே உள்ளது. விஜய் கட்சி பெயரை பதிவு செய்ததற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் தேர்தலில் நின்று வாக்கு சதவீதத்தை காட்டினால் தான் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். மகா விஷ்ணு கைது விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளது. கைது செய்யவில்லை என்றால் ஏன் கைது செய்யவில்லை என்று நீதிமன்றம் கேட்கும். கைது செய்யப்பட்ட பின் பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. எந்த மதமாக இருந்தாலும் மூடநம்பிக்கைகளை பள்ளிகளில் கற்று தருவது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மகாவிஷ்ணு கைது விவகாரம் appeared first on Dinakaran.

Related Stories: