நில ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை

சென்னை: நில ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக இருந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபுவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் பல கோடி மதிப்புள்ள 18.25 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக நிலத்தின் உரிமையாளரான கார்த்திக், அப்போதைய நீலாங்கரை இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நிலத்திற்கு இருதரப்பினரும் உரிமை கொண்டாடியதால் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். அதன்படி சிபிஐ அதிகாரிகள் நீலாங்கரை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஆனந்த்பாபுவுக்கு சொந்தமான 4 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மீது சிபிஐயினர் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தற்போது நுங்கம்பாக்கத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் அனந்த்பாபுவை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு உடனடியாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

The post நில ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்ட நுங்கம்பாக்கம் இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: