காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள் எப்போது முடியும்?.. நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அறிக்கையளிக்க உத்தரவு


மதுரை: காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள் எப்போது முடியும் என்பது குறித்து, நீர்வளத்துறை தலைமை ெபாறியாளர் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் பயன் பெறுவர். விவசாய நிலங்கள் மேம்படும். நிலத்தடி நீரின் தரம் அளவு உயரும் விவசாயிகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திட்டத்தை செயல்படுத்த இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்துமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை 3 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. பணிகள் விரைவுபடுத்தப்பட்டு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும், விரைவில் பயன்பாட்டுக்கு வரும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? எந்தளவு பணிகள் முடிந்துள்ளது? எப்போது பணிகள் முழுமையாக முடியும் என்பது குறித்து, நீர்வளத்துறை தலைமை பொறியாளர் நேரிலோ, வீடியோ கான்பரன்சிலோ ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

The post காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகள் எப்போது முடியும்?.. நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அறிக்கையளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: