வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் சடலமாக மீட்பு; குன்னூர் இளம்பெண், கூடலூர் மதரசா ஆசிரியர் பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோகம்


ஊட்டி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இருந்து திருமணமாகி சென்ற இளம்பெண், கணவர் மற்றும் குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல கூடலூரை சேர்ந்த பள்ளிவாசல் மதரசா ஆசிரியரும் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கரன்சி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன், சந்திரா தம்பதியின் மூத்த மகள் கவுசல்யா (26). இவருக்கும் வயநாடு சூரல்மலையை சேர்ந்த பிஜீஸ் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் பிஜீஸ், 1 வயது பெண் குழந்தை அதிதா மற்றும் கணவர் குடும்பத்தினருடன் கவுசல்யா சூரல்மலையில் வசித்து வந்தார். பிஜீஸ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி கவுசல்யா, பிஜீஸ், அதிதா மற்றும் கணவரின் குடும்பத்தினர் உட்பட 6 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர். மீட்பு குழுவினர் கவுசல்யா, பிஜீஸ், குழந்தை அதிதா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் வயநாடு சென்று குடும்பத்தினர் உடல்களை பார்த்து கதறி அழுதனர். பின்னர், அங்கேயே அடக்கம் செய்துவிட்டு ஊர் திரும்பினர். இது குறித்து கவுசல்யாவின் தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘சூரல்மலையில் நிலச்சரிவு என தெரிந்தவுடன், உடனடியாக அங்கு சென்று பார்த்தோம். அப்போது எனது மகள், மருமகன், பேத்தி, மருமகனின் தந்தை, தாய், மருமகனின் தங்கை மகள் ஆகிய 6 பேர் உயிரிழந்தது தெரியவந்தது.

எனது மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரின் உடல்கள் கிடைத்துவிட்டது. மீதமுள்ள மூன்று பேரின் உடல்கள் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனை முடித்து 3 பேரின் உடல்களையும் அங்குள்ள மயானத்தில் எரியூட்டிவிட்டு நேற்று காலை குன்னூர் திரும்பினோம்’’ என்றார். நிலச்சரிவில் சிக்கி குன்னூரை சேர்ந்த இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குன்னூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பந்தலூர் தாலுகா கையுண்ணி பகுதியில் உள்ள சூரத் என்னும் இடத்தை சேர்ந்த சிகாபு (32) என்பவரும் நிலச்சரிவில் பலியாகி உள்ளார். இவர் அங்குள்ள முண்டக்கை பள்ளிவாசலில் உள்ள மதரசாவில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். நிலச்சரிவில் பள்ளிவாசல் முற்றிலும் சேதம் அடைந்த நிலையில் சிகாபு கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளார். நேற்று முன்தினம் வரை அவரது உடல் கிடைக்கவில்லை.

சூரல்மலை பகுதியில் இருந்து முண்டக்கை செல்லும் பாலம் அடித்து செல்லப்பட்டதால் அப்பகுதிக்கு மீட்பு குழுவினர் செல்ல முடியவில்லை. தொடர்ந்து நேற்று தற்காலிக பாலம் அமைக்கப்பட்ட நிலையில் முண்டக்கை பகுதியில் தேடி உள்ளனர். நேற்று காலை 11 மணி அளவில் பள்ளிவாசல் கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் இருந்து சிகாபு உடல் மீட்கப்பட்டது. ஏற்கனவே கூடலூர் வாலிபர், பந்தலூரை சேர்ந்த கோயில் பூசாரி ஆகியோர் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. அவர்களது உடல்கள் நேற்று முன்தினம் இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பந்தலூர் வாலிபரின் குழந்தை, உறவினர்கள் 6 பேர் சாவு
வயநாடு நிலச்சரிவில் சிக்கி கோவை மாவட்டம் வால்பாறை பெண்ணின் உறவினர்கள் 6 பேர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது. வால்பாறை ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் பால்மணி. அவரது 3வது மகள் பிரியா. பிரியாவின் கணவர் தர்மராஜ் வயநாடு பகுதியை சேர்ந்தவர். பிரியாவும், தர்மராஜூம் பொள்ளாச்சியில் பணிபுரிகிறார்கள். எனவே அங்கேயே வசிக்கிறார்கள். இவர்களது குழந்தைகள் பால்மணியின் வீட்டில் உள்ளனர். தர்மராஜின் அண்ணன் சாமிதாஸ் (38) நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள எருமாடு பகுதியில் வசிக்கிறார். சாமிதாஸின் மனைவி இறந்துவிட்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் ஆனந்திகாவை வயநாடு மாவட்டம் சூரல்மலையில் உள்ள தனது மாமியார் வீட்டில் சாமிதாஸ் விட்டிருந்தார். இந்த நிலையில்தான் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆனந்திகா, சாமிதாஸின் மாமனார், மாமியார், உறவினர்கள் 2 பேர், அவர்களது குழந்தை என 6 பேர் இறந்துள்ளனர். ஆனந்திகா, சாமிதாஸின் மாமனார், மாமியாரின் உடல்கள் கிடைக்கவில்லை. மற்ற 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. வால்பாறை பெண்ணின் உறவினர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தது ராஜீவ் காந்தி நகர் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் சடலமாக மீட்பு; குன்னூர் இளம்பெண், கூடலூர் மதரசா ஆசிரியர் பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோகம் appeared first on Dinakaran.

Related Stories: