திருத்தணியில் முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நிறைவு: 7 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்

திருத்தணி, ஆக. 1: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த ஐந்து நாட்கள் நடைபெற்ற ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது. இதில், 7 லட்சம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா கடந்த 27ம் தேதி அஸ்வினியுடன் தொடங்கி 29ம் தேதி சிறப்பு பெற்ற ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, கோயில் மலை அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் 3ம் நாளான நேற்று மாலை தெப்ப உற்சவம் நடந்தது. ஐந்து நாட்கள் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பெரும் திரளாக பக்தர்கள் காவடிகளுடன் திருத்தணியில் குவிந்தனர். இதனால் திருத்தணி மலைக்கோயில் மற்றும் நகரின் முக்கிய வீதிகளில் காவடிகளின் ஒசைகள், விண்ணைப் பிளந்தன.

இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேற்பார்வையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, தூய்மை பணிகளில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருக்கோயில் நிர்வாகம் ஒருங்கிணைந்து சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், தடையின்றி மகிழ்ச்சியோடு பக்தர்கள் காவடி செலுத்தி சாமி தரிசனம் செய்து தங்களில் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழாவில் இறுதி நாளான நேற்று மாலை மலைக் கோயிலிலிருந்து வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க படிகள் வழியாக சரவணப் பொய்கை திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார்.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளத்தை சுற்றி கூடியிருக்க தீபாராதனை பூஜைகள் தொடர்ந்து சாமி குளத்தை சுற்றி 7 முறை வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏற்றி கற்பூரம் தீபாராதனை காட்டி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்து வழிபட்டனர். தெப்ப உற்சவத்தில் வீரமணி ராஜ் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. விழாவில் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ உட்பட முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், மூன்றாம் நாளான நேற்று தெப்ப உற்சவத்துடன் ஆடிக்கிருத்திகை விழா நிறைவு பெற்றது.

The post திருத்தணியில் முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நிறைவு: 7 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: