மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு

மும்பை: ஒன்றியத்தில் 3வது முறையாக பாஜ கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி ஜார்கண்ட் மாநில ஆளுநர் மற்றும் கூடுதல் பொறுப்பாக தெலங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று விமானம் மூலம் மும்பை வந்தார். அவருக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் உள்ளிட்டோர் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டலத்தில் அவருக்கு பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இதில், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிரா மாநிலம் 1960ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த மாநிலத்தின் 21வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். பதவியேற்பு விழாவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்நவிஸ், அஜித்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகாராஷ்டிரா ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், ‘சத்ரபதி சிவாஜி மகராஜின் மண்ணான மகாராஷ்டிராவின் ஆளுநராக பதவியேற்பதில் மிகுந்த பெருமையும், மதிப்பும் அடைகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ஜார்கண்ட், சட்டீஸ்கர், மணிப்பூர், சிக்கிம் மாநில புதிய ஆளுநர்களும் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

The post மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Related Stories: