ஒன்றிய அரசின் கடன் சுமை ரூ.185 லட்சம் கோடியாக உயரும்: ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் கடன் சுமை நடப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.185 லட்சம் கோடியாக உயரும் என, அரசு வெளியிட்ட கணிப்பில் தெரிவித்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் பிரதமர் மோடி தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ஒன்றிய அரசின் கடன் சுமை ரூ.55 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், பாஜ ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு கடன் சுமை உயரத் தொடங்கியது. 2015-15 நிதியாண்டில் கடன் சுமை ரூ.64.1 லட்சம் கோடியாக இருந்தது.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 51.4 சதவீதம். அதன் பிறகு 2015-16 நிதியாண்டில் ரூ.71 லட்சம் கோடியானது. 2022-23 நிதியாண்டில் ரூ.155.8 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்நிலையில், தற்போதைய கடன் சுமை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறுகையில், நடப்பு நிதியாண்டில் ஒன்றிய அரசின் கடன் சுமை ரூ.185 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜிடிபியில் 56.8 சதவீதம். கடந்த நிதியாண்டில் மார்ச் இறுதியின்படி கடன் சுமை ரூ.171.78 லட்சம் கோடியாக இருந்தது . இது ஜிடிபியில் 58.2 சதவீதம்என்றார்.

பாஜ ஆட்சியில் ஆண்டு வாரியாக கடன் சுமை
நிதியாண்டு கடன் சுமை ஜிடிபியில் சதவீதம்
2013-14 ரூ.58.6 லட்சம் கோடி 52.2%
2014-15 ரூ.64.1 லட்சம் கோடி 51.4%
2015-16 ரூ.71 லட்சம் கோடி 51.5%
2016-17 ரூ.75 லட்சம் கோடி 48.7%
2017-18 ரூ.82.9 லட்சம் கோடி 48.5%
2018-19 ரூ.92.5 லட்சம் கோடி 49%
2019-20 ரூ.105.2 லட்சம் கோடி 52.4%
2020-21 ரூ.122.1 லட்சம் கோடி 61.6%
2021-22 ரூ.138.9 லட்சம் கோடி 58.7%
2022-23 ரூ.155.8 லட்சம் கோடி 57.3%
2023-24 ரூ.171.78 லட்சம் கோடி 58.2%

The post ஒன்றிய அரசின் கடன் சுமை ரூ.185 லட்சம் கோடியாக உயரும்: ஒன்றிய அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: