53 பேரை திருமணம் செய்து மோசடி செய்த திருமண ராணிக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னை: பலரை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் சிறையில் உள்ள சத்யாவுக்கு திருமண மோசடியில் உடந்தையாக செயல்பட்ட தமிழ்செல்வியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த், திருமணத்துக்காக ஆன்லைன் செயலி மூலமாக பெண் தேடி வந்தார். அப்போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். இதை தொடர்ந்து, இருவரும் பழகி வந்த நிலையில், இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டில் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் அரவிந்த் சத்யாவுடன் தனது வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். அப்போது, குடும்ப அட்டையில் சத்யாவின் பெயரை இணைக்க முயன்ற போது சத்யா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிய வந்ததையடுத்து சத்யா தலைமறைவானார்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது தொடர்பாக பாதிக்கப்பட்ட மகேஷ் தாராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி நடந்த விசாரணையில், சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவரில் இருந்து காவல் துறையினர், பல தொழிலதிபர்கள் என 53 பேர் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு பணம், நகைகளை இழந்தது தெரியவந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நடந்த இந்த திருமண மோசடிகளில் உடைந்தயாக இருந்த தமிழ்செல்வி என்பவரை காவல்துறை விசாரித்த நிலையில் அவரும் தலைமறைவானார். இந்நிலையில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி தமிழ்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, பாதிக்கப்பட்ட 43வது கணவர் மகேஷ் அரவிந்த் தரப்பில், வழக்கறிஞர் ஹரிஸ்குமார் ஆஜராகி, திருமண செய்வதாக மோசடி செய்து 53 ஆண்களை சத்யாவும், அவரது தோழி தமிழ்செல்வியும் ஏமாற்றி இருப்பதால் முன் ஜாமீன் வழங்க கூடாது. சத்யாவை திருமணம் செய்ததால் ஏமாற்றப்பட்டதை அறிந்த மகேஷின் தாத்தா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, போட்டோவை பார்த்தவுடன் ஒகே சொல்லிட்டீங்களா? திருமணம் செய்யும் முன் விசாரிக்கவில்லையா? என்று பாதிக்கப்பட்டவர் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சத்யா 53 முறைக்கு மேல் திருமணம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரின் தோழி தமிழ்செல்வியை தேடி வருகிறோம் என்றார். இதனை பதிவு செய்த நீதிபதி, திருமண மோசடி வழக்கில் தொடர்புடைய தமிழ்செல்வியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

The post 53 பேரை திருமணம் செய்து மோசடி செய்த திருமண ராணிக்கு உடந்தையாக இருந்த பெண்ணின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: