ஒகேனக்கல்லுக்கு 1.45 லட்சம் கனஅடி நீர்வரத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியை தாண்டியது: டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு; இன்று இரவுக்குள் அணை முழுகொள்ளளவை எட்டும்

மேட்டூர்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கனஅடியாக உள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,53,091 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. இன்று இரவுக்குள் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உள்ளன. அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 1.60 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 1.52 லட்சம் கனஅடியாகவும், மாலையில் 1.60 லட்சம் கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,45,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் தடை நீடிக்கிறது. காவிரி கரையோரப்பகுதிகளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று பிற்பகலில் அணையின் நீர்மட்டம் 109.20 அடியாக உயர்ந்தது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல் டா பாசனத்திற்கு நேற்று மாலை தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 3000 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, இரவு 10 மணி முதல் வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப் பட்டது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீர்மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று இரவுக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் எந்நேரமும் அணையில் இருந்து உபரி நீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக உபரிநீர் திறக்கப்படலாம். இதனால் உபரிநீர் போக்கிப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த் துறையினரால் எச்சரிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 107.69 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 116.36 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 8.67 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு நேற்று காலை 1,34,115 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை வினாடிக்கு 1,53,091 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 87.78 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் நீர்த்தேக்க பகுதியான அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் அணையை காண சேலம், தர்மபுரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கூட்டம் கூட்ட மாக வந்து செல்கின்றனர். இதனால் புது பாலம் மற்றும் 16 கண் பாலம் பகுதிகளில் புதிய கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் களைகட்டி வருகிறது. தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

 

The post ஒகேனக்கல்லுக்கு 1.45 லட்சம் கனஅடி நீர்வரத்து மேட்டூர் அணை நீர்மட்டம் 116 அடியை தாண்டியது: டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு; இன்று இரவுக்குள் அணை முழுகொள்ளளவை எட்டும் appeared first on Dinakaran.

Related Stories: