1949ம் ஆண்டில், 450 மி.மீ விட்டம் கொண்ட இரும்பு குழாய் பதிக்கப்பட்டு காட்டு வழியாக குடிநீர் பெறப்பட்டது. 1954ம் ஆண்டில் சிறுவாணி நீர் தேக்க பரப்பு மேலும் விரிவானது. மாநில சீரமைப்புக்கு பின்னர் சிறுவாணி நீர் ஆதாரம் கேரள மாநிலத்திற்கு சொந்தமாகி விட்டது.
இந்நிலையில், தமிழக கேரளத்திற்கு இடையே தினமும் 101.4 மில்லியன் லிட்டர் (10.1 கோடி லிட்டர்) குடிநீர் பெறும் வகையில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த கடந்த 26-04-1966ம் தேதி முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தம் நிறைவேற காலதாமதம் ஏற்பட்டது. கடந்த 1973ம் ஆண்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
99 ஆண்டுகள், சிறுவாணி குடிநீரை தமிழக மக்கள் பயன்படுத்தலாம். தேவைப்பட்டால் ஒப்பந்த காலத்தை நீடிக்கலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 21-08-1976ம் தேதி தமிழக அரசு 16.16 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டும் பணியை துவக்கியது. கடந்த 1982ம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்டது. திறப்பு விழாவின்றி சிறுவாணி அணை திட்டம் நடைமுறைக்கு வந்தது. சிறுவாணி அணையின் நீர் தேக்க பரப்பு 22.6 சதுர கி.மீ. அணைக்கு முக்தியாறு, பட்டியாறு உள்ளிட்ட 37 ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது. சிறுவாணி நீர் பிடிப்பில் ஆண்டுதோறும் 1800 முதல் 2100 மி.மீ வரை மழை பெய்கிறது. புதிய அணை கட்டிய பின், வெயில் காலங்களில் அணை வறட்சி நிலைக்கு செல்வது வாடிக்கையானது.
அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். நிலமட்டத்திற்கு கீழ் பழங்கால தடுப்பணை மூலமாக 1.5 மீட்டர் வரை குடிநீர் பெறலாம். அணையில் 258 நாட்களுக்கு தேவையான குடிநீரை தேக்க வைக்க முடியும். சிறுவாணி குடிநீரை கோவை மாநகராட்சி, வழியோரத்தில் உள்ள 11 கிராமங்களை சேர்ந்த சுமார் 20 லட்சம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆசியாவின் 2வது தரமான குடிநீர் என யுனெஸ்கோ அறிவித்து, உலக பெருமை பெற்று தந்த போதிலும், வறட்சியால் சிறுவாணி நீர் திட்டம் தோல்விகரமாக மாறி விட்டது. சிறுவாணியில் இரண்டாவது குடிநீர் திட்டத்தை (பெரியாறு ஓடை குடிநீர் திட்டம்) செயல்படுத்த குடிநீர் வடிகால் வாரியம் ஆலோசித்தது. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு எல்லையில், சிறுவாணி அணையின் அடிவாரத்தில் பெரியாறு (காஞ்சிமாநதி) அமைந்துள்ளது. மங்கலம்பாளையம், சின்னாறு (கல் கொத்தி மலை), கோவை குற்றாலம், நண்டங்கரை, முண்டந்துறை அணைக்கு வரும் 30க்கும் மேற்பட்ட நீரோடைகளை ஒருங்கிணைத்து சிறுவாணி 2வது திட்டத்தை செயல்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக சாடிவயல் மரப்பாலம் வனத்தில் நீர் தேக்கம் அமைக்கலாம். இங்கு சிறுவாணியின் பழைய குடிநீர் குழாய் (500 மி.மீ விட்டம் கொண்டது) ஏற்கனவே உள்ளது. இந்த குழாய் மூலமாக குடிநீரை 3 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாக சிறுவாணி சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்ல முடியும். பெரியாற்றில் வரும் நீர்வரத்திற்கு ஏற்ப தினமும் 3 முதல் 4 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும் நிலையிருந்தது.
இந்த திட்டம் அரசின் பரிசீலனையில் இருந்தது. ஆனால் திட்டம் நிறைவேறாமல் பல ஆண்டாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நகரில் 24 மணி நேரம் குடிநீர் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் உள்ளது.
பில்லூர் அணை நீர் தேக்கத்தில் அடுத்தடுத்த திட்டங்கள் உருவாகி வருகிறது. ஆனால், சிறுவாணி நீர் பிடிப்பு பகுதியில் கூடுதல் குடிநீர் திட்டங்கள் நிறைவேறாமல் இருப்பதால் மக்கள் தவிப்படைந்துள்ளனர். நொய்யல் ஆற்றுக்கு பாயும் நீர் குறைந்து விடும். எனவே, புதிய குடிநீர் திட்டங்கள் சிறுவாணி அடிவார பகுதியில் உருவாக்க முடியவில்லை என குடிநீர் வாரியத்தினர் தெரிவித்தனர்.
The post சிறுவாணி 2வது குடிநீர் திட்டம் வருமா? நீண்ட காலமாக எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.