தொடர் விடுமுறை எதிரொலி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள் 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வருகை

பொள்ளாச்சி : தொடர் விடுமுறை என்பதால் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. அணையை பார்வையிடுவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மேலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அளவுக்கு அதிகமாக இருக்கும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.இதில் கடந்த சில வாரத்திற்கு மேலாக ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பருவமழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்தது. மேலும், ஆழியார் பகுதியில் கனமழை மட்டுமின்றி பலத்த சூறைக்காற்று வீசியதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அணையில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

இதனால், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில், ஆழியார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால், கடந்த 2 நாட்களாக அவ்வப்போது லேசான வெயிலின் தாக்கம் ஏற்பட்டது. மேலும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆழியார் அணை மற்றும் பூங்காவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

மொத்தம் 120 அடி கொண்ட ஆழியார் அணையில் தற்போது 119 அடிக்கு தண்ணீர் இருந்தாலும், கடல்போல் காட்சியளிக்கும் அணையில் அழகை கண்டு ரசித்து சென்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் அணைக்கு முன்பகுதியில் உள்ள பூங்காவை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டு ரசித்தனர். பலரும் வெகுநேரம் பூங்காவில் பொழுதை கழித்தனர். ஆழியார் அணைக்கு கடந்த 2 நாட்களில் சுமார் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post தொடர் விடுமுறை எதிரொலி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள் 2 நாட்களில் 10 ஆயிரம் பேர் வருகை appeared first on Dinakaran.

Related Stories: