தமிழக பாரம்பரியமான ஆடிபெருக்கு விழாவுக்கு மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடு

கரூர், ஜூலை 29: தமிழக பாரம்பரியமான ஆடிபெருக்கு விழாவுக்கு மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேரில் ஆய்வு செய்தார். கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் வட்டத்திற்கு உட்பட்ட தவிட்டுப்பாளையம் மற்றும் புன்செய் புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் வரும் தடுப்பணை பகுதியில் மாவட்ட கலெக்டர் தங்கவேல், காவிரி ஆற்று பகுதியில் நீர்வரத்து அதிகமாக வர உள்ள காரணமாகவும், ஆடி 18 அன்று பொதுமக்கள் அதிகமாக காவிரி ஆற்று பகுதியில் கூடும் இடங்களில் பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தங்கவேல் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக காவிரி கரையோரம் அமைந்துள்ள டெல்டா மாவட்டங்களின் மாவட்ட கலெக்டர்களுக்கு காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ள காரணத்தால் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீரை சேமிக்கும் முறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி கரையோர மக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

தொடர்ந்து கரூர் மாவட்ட நீர்வளத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து புஞ்சை புகளூர் தவிட்டுப்பாளையம் மற்றும் புஞ்சை புகளூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் காரணமாகவும், நேற்று நண்பகல் 110 அடியை தாண்டி உள்ளதால் காவிரி ஆற்றிலிருந்து எந்த நேரமும் அதிக அளவில் நீர் திறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே காவிரி ஆற்றுப்பகுதியில் கரையோர பகுதியில் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கும் , புகைப்படம் எடுப்பதற்கு கூடாது என சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆடி 18 அன்று பொதுமக்கள் காவிரி ஆற்றில் வழிபாட்டிற்காக அதிக அளவில் பயன்படுத்தும் பகுதிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்காக வருவாய்த்துறை மற்றும் காவல்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், புஞ்சை புகளூர் வட்டாட்சியர் தனசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post தமிழக பாரம்பரியமான ஆடிபெருக்கு விழாவுக்கு மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: