மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் பெண் அதிகாரியின் நெற்றியில் பொட்டு வைத்த காங்கிரஸ் எம்பி: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்

மைசூரு: சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியின் எம்பி சுனில்போஸ். கர்நாடக மாநில சமூகநலத்துறை அமைச்சர் எச்.சி.மகாதேவப்பாவின் மகனான இவர், ஆடி வெள்ளியை முன்னிட்டு மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சுற்றுலா துறை துணை இயக்குனர் சவிதா என்பவருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது தரிசனத்தை முடித்துக் கொண்டு ஆதரவாளர்கள் முன்னிலையில் பெண் அதிகாரியின் நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்துள்ளார். இச்சம்பவத்தின் வீடியோ, போட்டோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட சுனில்போஸ் தேர்தல் ஆணையத்திற்கு அளித்திருந்த தகவலில் மனைவி, பிள்ளை மற்றும் மதம் குறித்து குறிப்பிடாமல் மறைத்ததாக பாஜவினர் புகார் அளித்தனர். சுனில்போஸ் திருமணத்தை மறைத்து விட்டார். எம்.கே.சவிதா என்பவரை திருமணம் செய்துள்ள அவருக்கு புவி என்ற பெயரில் 6 வயது பெண் குழந்தை உள்ளது என்பதை போட்டோ ஆதாரத்துடன் இணைத்து புகார் அளித்தனர். இப்போது, சுற்றுலா துறை பெண் அதிகாரி சவிதாவுடன் சாமுண்டீஸ்வரி மலைக்கோயிலுக்கு வந்த சுனில்போஸ் கோயிலில் வைத்து அவரது நெற்றியில் குங்குமப்பொட்டு வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

The post மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் பெண் அதிகாரியின் நெற்றியில் பொட்டு வைத்த காங்கிரஸ் எம்பி: மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் appeared first on Dinakaran.

Related Stories: