குஜராத் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் மூன்றரை ஆண்டுக்கு பிறகு புதுவைக்கு முழுநேர ஆளுநர்: பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்

புதுச்சேரி: புதுச்சேரிக்கு மூன்றரை ஆண்டுக்கு பிறகு முழுநேர ஆளுநராக குஜராத் முன்னாள் கூடுதல் செயலாளரும், பிரதமர் மோடிக்கு நெருக்கமானவருமான கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா – புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு இருந்தது.

தேர்தலுக்கு பிறகு ஆளுநர்கள் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, தற்போது தெலங்கானா மற்றும் புதுவைக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, புதுவை மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுவை துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.கைலாசநாதன் குஜராத்தின் முன்னாள் கூடுதல் தலைமை செயலாளராக இருந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.

கேரளாவை சேர்ந்த இவர் தமிழகத்தின் ஊட்டியில் வளர்ந்தவர். இவரது தந்தை தபால் துறையில் பணியாற்றியவர். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த இவர், 1979 பேட்ச் குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். குஜராத்தின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த இவர் 2013ல் ஓய்வு பெற்றார். எனினும், குஜராத்தில் தலைமை முதன்மை செயலாளர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டு மீண்டும் பணியமர்த்தப்பட்டார். கடந்த ஜூன் 30ம் தேதி தான் இந்த பொறுப்பில் இருந்து கே.கைலாசநாதன் ஓய்வு பெற்றார்.

இவர் கடந்த 18 ஆண்டுகளாக குஜராத் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது புதுவை துணை நிலை ஆளுநராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 2016ம் ஆண்டு மே 29ம் தேதி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி நியமிக்கப்பட்டார். இவர் மீது புதுவை பாஜவினர் டெல்லியில் முகாமிட்டு புகார் கொடுத்த வண்ணம் இருந்தனர்.

இதனால் இவரை ஒன்றிய அரசு, கடந்த 2021 பிப்ரவரி 14ம் தேதி நீக்கியது. தொடர்ந்து தெலங்கானா கவர்னராக இருந்த தமிழிசை கூடுதலாக புதுவையின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ சார்பில் தென் சென்னையில் போட்டியிடுவதற்கு வசதியாக ஆளுநர் பதவியை கடந்த மார்ச் 18ம் தேதி ராஜினாமா செய்தார். மார்ச் 23ம் தேதி புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதல் பொறுப்பேற்றார். கிரண்பேடிக்கு பிறகு சுமார் மூன்று ஆண்டுகள் 5 மாதத்துக்கு பிறகு தற்போது தான் முழுநேர துணை நிலை ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* 4 முதல்வர்களிடம் பணியாற்றிய பெருமை
ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கைலாசநாதன், 2006ம் ஆண்டு முதல் குஜராத் முதல்வர் அலுவலகத்தில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். 2013ல் ஓய்வுபெற்ற பின் பிரதமர் மோடியின் விருப்பத்தின் பேரில், முதல்வர் அலுவலகத்தில் தலைமை முதன்மைச் செயலர் என்ற சிறப்புப் பதவி உருவாக்கப்பட்டு அந்த பொறுப்பில் கைலாசநாதன் நியமிக்கப்பட்டார். குறிப்பாக கடந்த 18 ஆண்டுகளில் நரேந்திர மோடி, ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி மற்றும் பூபேந்திர படேல் ஆகிய நான்கு முதல்வர்களுடன் இவர் மிக முக்கிய பதவியில் பணியாற்றி உள்ளார்.

* 45ஆண்டு அதிகாரம்: மோடியின் கே.கே.
2014ல் ஒன்றிய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னரும், குஜராத் மீதே மோடியின் கண் பார்வை இருந்தது. இவரின் பணி காலத்தில் அதிகார மையாக உருவெடுத்தவர்தான் கே.கைலாசநாதன். இவர் முதலில் கலெக்டராக சுரேந்திரநகர் மாவட்டத்தில் பதவியேற்றார். தொடர்ந்து சூரத் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். பின்னர், குஜராத்தின் கிராமப்புற மேம்பாடு, தொழில்கள், குஜராத் கடல்சார் வாரியம், நர்மதா வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகள், பெருநிறுவனங்களில் பணியாற்றினார்.

குஜராத் கடல்சார் வாரியத்தின் BOOT (Build-Own-Operate-Transfer) கொள்கை அவரது பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. 1994-95ல் கைலாசநாதன் குஜராத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்தார். 1999 மற்றும் 2001க்கு இடையில் அகமதாபாத் நகராட்சி ஆணையராக கைலாசநாதன் இருந்தபோது, ​குடிநீர் நெருக்கடியைத் தீர்க்க 43 கிலோ மீட்டர் நீள பைப்லைன் அமைத்தல் உட்பட – நகருக்கு அவசரகால நீர் விநியோகத்துக்கான ரஸ்கா திட்டத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது 2013 முதல் 2014 வரை தலைமை முதன்மை செயலாளராக கே.கைலாசநாதன் (கே.கே.) நியமிக்கப்பட்டார். குஜராத்தின் அதிகாரத்துவ மற்றும் அரசியல் வட்டாரங்களில் பிரபலமாக அறியப்பட்ட கே.கே., 45 ஆண்டுகள் மாநில அதிகாரத்தில் பல்வேறு பதவிகளில் இருந்து, இறுதியில் மாநிலத்தில் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் அதிகார மையமாக உருவெடுத்தார். இவர் மோடியின் கே.கே. என்று அம்மாநில அரசியலில் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

The post குஜராத் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் மூன்றரை ஆண்டுக்கு பிறகு புதுவைக்கு முழுநேர ஆளுநர்: பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் appeared first on Dinakaran.

Related Stories: