வந்தவாசி, ஜூலை 27: வந்தவாசி நகராட்சியில் உள்ள குப்பை பிரிக்கும் மையத்தை நகராட்சிகளின் மாநில இணை இயக்குனர் திடீரென ஆய்வு செய்தார். நகராட்சிகளின் நிர்வாக இணை இயக்குனர் சா.லட்சுமி நேற்று வந்தவாசி நகராட்சியில் குப்பை பிரிக்கும் மையத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து அதனை உரமாக மாற்றி விற்பனை செய்வது குறித்து விபரம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து அக்பர் சாலையில் குடிநீர் குழாயில் வரும் தண்ணீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா, மேலும் அனைத்து தெருவிளக்குகளும் எரிகின்றதா எனவும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, பொறியாளர் கோபு, மேலாளர் ஜி.ரவி துப்புரவு ஆய்வாளர் ராமலிங்கம் உள்ளிட்ட பலரும் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் வந்த இணை இயக்குனரை நகராட்சி தலைவர் எச்.ஜலால், துணைத்தலைவர் கா.சீனிவாசன் வரவேற்றனர். அப்போது நகராட்சி தலைவர் ஜலால் ஆரணி சாலை கோட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தும் சுக நதி ஒட்டியவாறு உள்ள சுடுகாட்டிற்கு செல்லும் ஏரி சாலையில் சிமெண்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். நகராட்சிக்கு ஆணையாளர் இல்லாததால் நிரந்தர ஆணையாளர் நியமனம் செய்ய வேண்டும். கட்டிட ஆய்வாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக உருவாக்கி உள்ள பகுதிகளில் மழை நீர் கால்வாய், சிமெண்ட் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இணை இயக்குனரிடம் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து திட்ட மதிப்பீடு தயார் செய்து உடனடியாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதி அளித்தார். அப்போது கவுன்சிலர்கள் எம்.கிஷோர் குமார், நூர்முகமது உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
The post குப்பை பிரிக்கும் மையத்தை நகராட்சிகளின் மாநில இணை இயக்குனர் திடீர் ஆய்வு வந்தவாசி நகராட்சியில் உள்ள appeared first on Dinakaran.