பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சித்து கோஷம் எழுப்பிய ஆர்ஜேடி எம்எல்சி மேலவையில் இருந்து நீக்கம்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சித்து கோஷம் போட்டதற்காக ராஷ்டிரிய ஜனதா தள எம்எல்சி சுனில் குமார் சிங் மேலவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பீகார் சட்ட மேலவையில் கடந்த பிப்ரவரியில் நடந்த விவாதத்தின் போது,ஆளும் கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது, ஆர்ஜேடி எம்எல்சி சுனில் குமார் சிங் முதல்வர் நிதிஷ்குமாரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து கோஷம் போட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க நெறிமுறை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்றுமுன்தினம் தனது அறிக்கையை மேலவையின் தற்காலிக தலைவர் அவதேஷ் நாராயண் சிங்கிடம் சமர்ப்பித்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த மேலவை கூட்டத்தில் சுனில் குமார் சிங்கை நீக்குவதற்கான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆர்ஜேடி எம்எல்சி முகமது கரி சோயிப்பை அவையில் இருந்து 2 நாள் சஸ்பெண்ட் செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெறிமுறை குழு விசாரணையின் போது முகமது சோயிப் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால், சுனில் குமார் சிங் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி எம்எல்சியான ராப்ரி தேவி கூறுகையில்,‘‘ சுனில் குமாரை மேலவையில் இருந்து நீக்கி ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்றின் இருண்ட அத்தியாயம்’’ என தெரிவித்துள்ளார்.

The post பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை விமர்சித்து கோஷம் எழுப்பிய ஆர்ஜேடி எம்எல்சி மேலவையில் இருந்து நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: