பாதாள சாக்கடையில் ஆட்கள் இறங்கி சுத்தம் கான்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து: வீடியோ வைரலால் கடலூர் மாநகர ஆணையர் அதிரடி

கடலூர்: கடலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடையில் ஆட்கள் இறங்கி சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. இதில் தற்போது வரை 36 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இயந்திரத்தின் உதவியுடன் ஒப்பந்ததாரர் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் 4வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தெருவில் வழிந்தோடி உள்ளது. இதையடுத்து அங்கு சுத்தம் செய்ய சென்ற பாதாள சாக்கடை ஒப்பந்த ஊழியர்கள், உள்ளே இறங்கி சுத்தம் செய்துள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் செல்போனில் வீடியோ எடுத்து தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதுபற்றி கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு நடத்திய விசாரணையில், ஒப்பந்த பணியாளர்கள், சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்தது உறுதியானது. இதை தொடர்ந்து ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

The post பாதாள சாக்கடையில் ஆட்கள் இறங்கி சுத்தம் கான்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து: வீடியோ வைரலால் கடலூர் மாநகர ஆணையர் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: