கறுப்பு உலர் திராட்சையின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுவாக பிரவுன் நிறத்தில் இருக்கும் உலர் திராட்சையை பயன்படுத்தும் அளவுக்கு கறுப்பு நிறத்தில் இருக்கும் உலர் திராட்சையை அவ்வளவாக யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால், பிரவுன் நிறத்து உலர் திராட்சையை காட்டிலும் கறுப்புநிற உலர்திராட்சையில் சத்துகள் அதிகளவில் இருக்கிறது.

உதாரணமாக, ரத்த சோகை, செரிமானக கோளாறு, ரத்தத்தில் நச்சு, கொலஸ்டிரால் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு கறுப்பு உலர் திராட்சை தீர்வாக இருக்கிறது. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம். தினசரி கறுப்புத் திராட்சையை எடுத்துக் கொள்ளும்போது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்தை வழங்கி, மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.

உலர் கறுப்புத் திராட்சை செரிமானக் கோளாறுகளான வாயு, நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை சரிசெய்கிறது. அது மட்டுமின்றி, செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், தினசரி உலர் திராட்சையை சாப்பிடுவதால், குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

திராட்சையில் உள்ள அமிலம் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளதால், பெருங்குடல் அழற்சி, புற்று, தொற்று உள்ளிட்ட அபாயத்தை குறைக்கும்.ஒரு சில பழங்களில் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், பொட்டாசியம் ஆகிய கனிமங்கள் இருக்கும். அவை கறுப்பு திராட்சையில் அதிகமாகவே இருக்கிறது. எனவே, எலும்புருக்கி நோயில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், வயதாகும் போது ஏற்படும் எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்புகளில் துளைகள் ஏற்படுவது போன்றவற்றையும் தடுக்கிறது.

கறுப்பு நிற உலர் திராட்சையில், அதிக இரும்புச் சத்து இருக்கிறது. அதே நேரத்தில், வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது. இதனால், உடலில் சத்து கிரகிக்கும் தன்மை அதிகரிக்கிறது. அது மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்துக்குத் தேவையான வைட்டமின் சி, உடலை பலப்படுத்துகிறது.இது தவிர கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் கறுப்பு உலர் திராட்சைகள் உதவுகின்றன.

ரத்த சோகையை தடுத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது கறுப்புத் திராட்சையில் நிறைந்துள்ள இரும்புச் சத்து ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. மேலும் கறுப்பு திராட்சையில் இருக்கும் காப்பர், உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல தேவையான சில வைட்டமின்களும் உள்ளன. இதனால், ரத்த சோகை தடுக்கப்படுவதோடு, ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
கறுப்பு திராட்சை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் புற்றுநோய் மற்றும் கட்டி வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஆக்ஸிஜனேற்ற சேதங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து பாதுகாக்கிறது.

கறுப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது, ரத்த அழுத்த அளவை சீராக வைக்கிறது. குறிப்பாக, LDL கொலஸ்டிரால் எனப்படும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது. இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது. எனவே, தினமும் சிறிதளவு கறுப்பு திராட்சை சாப்பிட்டு வந்தால், இதயநோய் அபயாத்தைக் குறைக்கலாம். மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கவும் உதவுகிறது.

தொகுப்பு: தவநிதி

The post கறுப்பு உலர் திராட்சையின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Related Stories: