திருவேற்காட்டில் கொசு உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பூந்தமல்லி: திருவேற்காட்டில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு நேற்று நகராட்சி சுகாதார குழுவினர் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். இதைத் தொடர்ந்து, நகராட்சி பகுதிகளில் திடக்கழிவுகள் கொட்டுபவர்கள், கழிவுநீரை திறந்து விடுபவர்கள் மற்றும் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருவேற்காடு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் பகுதியில் கடந்த 10 நாட்களில் பலருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக சுகாதார குழுவினருக்கு தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் சுகாதார குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் கொசுமருந்து தெளிப்பது, புகை அடித்தல், கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் ஆதாரங்களை அழித்தல் உள்பட பல்வேறு தீவிர சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அயனம்பாக்கம் பகுதியில் நகராட்சி ஆணையர் கணேசன் அறிவுறுத்தலின்பேரில், நேற்று மாலை நகராட்சி துப்புரவு அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் சுகாதார குழுவினர் கள ஆய்வு நடத்தினர். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானம் நடக்கும் இடத்தில் டயர், பீப்பாய், டிரம் உள்பட பல்வேறு பொருட்களில் தேங்கியிருந்த நீரில் டெங்கு கொசு புழுக்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பெரிய கோலடி பகுதியில் தனியார் நிறுவன வாகனத்தில் திடக்கழிவுகள் கொண்டு வந்து கொட்டுவதை, சுகாதார குழுவினரின் ரோந்து பணியின்போது தடுத்து நிறுத்தினர். மேலும், அந்த தனியார் நிறுவனத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குப்பை கொட்டிய வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருவேற்காடு பகுதிகளில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள் மீதும், திடக்கழிவு கொட்டுபவர்கள் மீதும், கண்ட இடங்களில் தனியார் லாரிகள் மூலம் கழிவுநீரை திறந்து விடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

The post திருவேற்காட்டில் கொசு உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: