நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மேற்குவங்க சட்டபேரவையிலும் தீர்மானம்

கொல்கத்தா: நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மேற்குவங்க சட்டபேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு பழைய முறைப்படி மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தீர்மானத்தில் வலியுறுத்தபட்டது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் நடப்பாண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. நீட் வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம் , நீட் தேர்வு மையங்களே நீட் முறைகேடுகளை முன்னெடுத்தது என அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

நீட் தேர்வை நடத்திய தேசியத் தேர்வு முகமையும் சில ஆயிரம் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியதும் சர்ச்சையானது. இதனையடுத்து நாடு முழுவதுமே நீட் தேர்வுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. நீட் முறைகேடுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின. டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்க மாநிலங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரின. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசு நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றது. தற்போது மேற்கு வங்க மாநில சட்டசபையிலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் மேற்கு வங்க மாநில அரசே நடத்திய பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் எனவும் மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வலியுறுத்தி உள்ளது.

The post நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மேற்குவங்க சட்டபேரவையிலும் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: