பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம், பள்ளிகள், அங்கன்வாடியில் திடீர் ஆய்வு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும்

*தலைமையாசிரியருக்கு கலெக்டர் அறிவுரை

நெமிலி : பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் 10ம் வகுப்பு ேதர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதியில் பள்ளி, மருத்துவமனை, அங்கன்வாடி உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் சந்திரகலா நேற்று ஆய்வு செய்தார். காலையில் பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று, பணி செயல்பாடுகள் குறித்து தலைவர் கவிதா சீனிவாசன் மற்றும் செயல் அலுவலர் குமாரிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு வாராந்திர பரிசோதனைக்கு வந்திருந்த கர்ப்பிணிகளிடம், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா? டாக்டர்கள் வருகிறார்களா? என கேட்டறிந்தார்.

பின்னர் சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து பிரிவுகள், கட்டிடங்களை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் வருகை பதிவேடுகளை சரிபார்த்து, நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்தால் உடனடியாக அதனை சரி செய்து தரப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பனப்பாக்கம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்து, பேரூராட்சி முழுவதும் வாங்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து வைக்கப்படுகிறதா?, மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு உரங்கள் தயாரிக்கப்படுகிறதா? என பார்வையிட்டார். மேலும் உரங்களை எவ்வாறு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

மேலும், குப்பை கழிவுகளை வண்ணம் தீட்டு அதில் செயற்கை பூக்கள் வைத்து அலங்காரம் செய்யப் பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டார். மேலும், தந்தை பெரியார் நகர் பகுதியில் நடைபெற்று வரும் பூங்கா பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் நிலுவை பணிகளை உடனடியாக முடித்து பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்தார்
தொடர்ந்து அருந்ததி பாளையத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் சீருடைகளை அணிந்து வர வேண்டும் மற்றும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் சந்திரகலா சாப்பிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆய்வு செய்து, கடந்த 5 ஆண்டுகளாக 10 வகுப்பு தேர்ச்சி 60 சதவீதம் மட்டுமே உள்ளதால், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க தலைமையாசிரியருக்கு அறிவுரை வழங்கினார்.. மேலும், நெடும்புலி பகுதியில் உள்ள ரேஷன் கடையை கலெக்டர் சந்திரகலா ஆய்வு செய்துஇருப்புகளை சரிபார்த்தார். தொடர்ந்து, பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார், தாசில்தார் ஜெயபிரகாஷ், செயல் அலுவலர் குமார், பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன், டாக்டர் ரதி, தலைமை ஆசிரியர் ஷர்மிளா, துணை தாசில்தார் சுரேஷ், வட்ட வழங்கல் அதிகாரி சுரேஷ், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, விஏஓ லட்சுமணன் ,சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி சங்கர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post பனப்பாக்கம் பேரூராட்சி அலுவலகம், பள்ளிகள், அங்கன்வாடியில் திடீர் ஆய்வு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: