சித்தோடு அருகே போலீஸ் வேன்-லாரி மோதி விபத்து கைதிகள் உட்பட 8 பேர் காயம்

பவானி : கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார், சப்ராவை சேர்ந்த முகமது சகாபுதீன் மகன் ஆரிப்ராஜ் (30), கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது யாசின் மகன் முகமது சாபுதீன் (50), மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த சுல்தான் மைதின் மகன் மாலிக் பாட்ஷா (22), ஆகியோரை சென்னை அறிவுரை குழுமம் முன்பாக ஆஜர்படுத்த கோவை மாவட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் குமரேசன் தலைமையில் 6 போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்துச் சென்றனர்.

கடந்த 21ம் தேதி புறப்பட்டு சென்ற இவர்கள் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர். அறிவுரைக் குழுமம் முன்பாக 22ம் தேதி மூவரையும் ஆஜர்படுத்திவிட்டு, நேற்று காலை சென்னையிலிருந்து கோவைக்கு மீண்டும் போலீஸ் வேனில் புறப்பட்டனர். இந்நிலையில், சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த நசியனூர், அப்பத்தாள் கோயில் பிரிவு அருகே வந்தபோது ரோட்டின் குறுக்கே பைக் திடீரென வந்தது. இதனால், பைக் மீது மோதாமல் இருக்க போலீஸ் வேனை ஓட்டிச் சென்ற ஆனந்தக்கண்ணன் பிரேக் பிடித்ததில், நிலை தடுமாறி கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரியில் நேருக்கு நேர் மோதியது.

இதில், போலீஸ் வேனில் பயணித்த எஸ்ஐ குமரேசன், டிரைவர் ஆனந்தக்கண்ணன், போலீசார் விக்னேஷ், ரங்கநாதன் மற்றும் ஆரிப்ராஜ் ஆகியோர் காயமடைந்தனர். மேலும், லாரி டிரைவர் ஓமலூர், மரக்கொந்திராசனூரை சேர்ந்த ராமகவுண்டர் மகன் மாதேஷ் (32), உடன் பயணித்த சேலம், தாரமங்கலம், துளசிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (47), அவரது மனைவி சாந்தி (44) ஆகியோர் காயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த முகமது சாபுதீன், மாலிக் பாட்ஷா ஆகியோர் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்தில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சித்தோடு போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சேதமடைந்த போலீஸ் வேனை மீட்டு, சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணை கைதிகள் காயமடைந்ததால், பாதுகாப்புக்காக ஈரோட்டிலிருந்து எஸ்ஐ தலைமையில், ஐந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்விபத்து குறித்து, சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

The post சித்தோடு அருகே போலீஸ் வேன்-லாரி மோதி விபத்து கைதிகள் உட்பட 8 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: