இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வினை 764 பேர் எழுதினர்

 

கிருஷ்ணகிரி, ஜூலை 22: கிருஷ்ணகிரியில் 3 மையங்களில் நடந்த இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வினை 764 பேர் எழுதினர். 2023-24ம் கல்வி ஆண்டில் 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 1000 பணியிடங்கள் கூடுதலாக தேர்வு செய்யப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த போட்டித் தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுக் காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப அரசால் வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்துத் தரவரிசை படடியல் வெளியிடப்படும். அதன் பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் பணி நியமனம் செய்யப்படும்.

அதன்படி, நேற்று கிருஷ்ணகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி என மூன்று மையங்களில் தேர்வு நடந்தது. இந்த மூன்று மையங்களில் மொத்தம் 764 பேர் இந்த தேர்வினை எழுதினர். இந்த தேர்வினை கண்காணிக்க அறை கண்காணிப்பாளர்கள், மைய கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டிருந்தனர். 3 தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அத்துடன் அனைத்து மையங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

 

The post இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வினை 764 பேர் எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: