ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 16 பேர் கைதான நிலையில் மேலும் 2 ரவுடிகளுக்கு தனிப்படை போலீசார் வலை: தேமுதிக வழக்கறிஞரிடம் விசாரணை, சீசிங் ராஜாவை பிடிக்க ராஜமுந்திரிக்கு விரைந்த தனிப்படை


சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 ரவுடிகளை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தமிழ்நாட்டையே உலுக்கிய பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரின் அதிரடியால் பலரும் கலக்கத்தில் உள்ளனர். வழக்கமாக ஒரு கொலை சம்பவம் நடந்தால் அந்த கொலையை செய்தவர்கள் நீதிமன்றத்திலோ அல்லது காவல் நிலையத்திலோ சரணடைந்து விடுவார்கள்.

அதன் பிறகு அந்த கொலையை பற்றி பெரிய அளவிற்கு பேச்சு இருக்காது. ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பவம் நடந்த அன்றே 8 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநாள் மேலும் 3 பேர் பிடிக்கப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க அவரது தம்பி பொன்னை பாலு, ரவுடிகள் திருவேங்கடம், திருமலை உள்ளிட்டோர் சேர்ந்து இந்த கொலையை செய்ததாகவும், இதற்கு வழக்கறிஞர் அருள் மூளையாக இருந்தார் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இத்துடன் இந்த வழக்கு முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், சென்னை மாநகர கமிஷனர் மாற்றப்பட்டு புதிய கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். அன்று முதல் இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் 11 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டு வழக்கு முழுவதுமாக விசாரணை செய்யப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கில் யார் யாரெல்லாம் பணம் கொடுத்துள்ளார்கள், யார் இதற்கு மூளையாக செயல்பட்டார் என்ற கோணத்தில் முழு வழக்கு விசாரணையும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள் என ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் கைது செய்யப்பட்ட 11 பேரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்தனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி தப்பித்து ஓடும்போது போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். மற்ற நபர்களிடம் விசாரணை செய்ததில் அதிமுகவைச் சேர்ந்த மலர்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் சதீஷ்குமார் என மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்க்கொடி பண உதவி செய்தது தெரிய வந்தது. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜ கட்சியில் பொறுப்பில் இருந்த ஆற்காடு சுரேஷின் கள்ளக்காதலி அஞ்சலையும் கைது செய்யப்பட்டார். மேலும் நேற்று முன்தினம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் நேற்று முன்தினம் போலீசார் விசாரணை முடிந்து சிறையில் அடைத்தனர்.

அஞ்சலையிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வட்டி தொழிலுக்கு ஆற்காடு சுரேஷ் பக்கபலமாக இருந்ததாகவும், அதனால் தனது கணவரை கைவிட்டு பல ஆண்டுகளாக ஆற்காடு சுரேசுடன் வாழ்ந்து வந்ததும், ஆனால் அவரை கொலை செய்ததும் ஏரியாவில் எனது மவுசு குறைந்து விட்டது. மேலும் வட்டிக்கு பணம் வாங்கிய பெரிய ஆட்களும் தற்போது என்னை மதிப்பதில்லை. எனவே ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்க ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு பண உதவி செய்ததாகவும் அஞ்சலை வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அருள் மற்றும் ஹரிஹரனுக்கு நன்கு பழக்கம் என்பதும், ஹரிதரன் வழக்கறிஞர் என்பதால் அவரிடம் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்களை அழிக்க ஹரிஹரன் கொடுத்ததும் அதனை தீவைத்து ஹரிதரன் எரித்து கூவம் ஆற்றில் போட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதில் 3 செல்போன்கள் மீட்கப்பட்டன.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் இந்தக் கொலை வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சம்பவ செந்திலைப் பிடிக்க 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் சீசிங் ராஜா உள்ளிட்ட சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர். சீசிங் ராஜா ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் பெறப்பட்ட விசாரணை அடிப்படையிலும், மேலும் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்தும் கடைசி 3 மாதத்தில் அவர்கள் யார் யாரிடம் பேசியுள்ளார்கள், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 16 நபர்களின் வங்கி கணக்கு பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல விவரங்களை போலீசார் தொடர்ந்து சேகரித்து அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேமலதா கண்டனம்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவை சேர்ந்த திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டனுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவது தவறான செய்தி. விசாரணை என்ற பெயரில் அழைத்துப் பேசியுள்ளனர். விசாரணையில் எதுவும் நிரூபிக்கப்படாததால் அவரை இந்த வழக்கில் உட்படுத்தாமல் அனுப்பிவிட்டனர். அதற்குள் தேமுதிகவிற்கும் தொடர்பு இருக்கிறது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்; கண்டிக்கதக்கது என தேமுதிக தலைவர் பிரேமலதா கூறியுள்ளார்.

* பாம் சரவணன் எங்கே?
பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்தை அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் திறந்து வைத்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் தாஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக பிரபல ரவுடி பாம் சரவணன் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரித்திருந்தனர். பாம் சரவணன் ஆதரவாளரான புளியந்தோப்பைச் சேர்ந்த வழக்கறிஞரிடம் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம் சரவணன் ஆம்ஸ்ட்ராங் கட்சியில் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்தவர். இவர் கொலை செய்யப்பட்ட தென்னரசுவின் சகோதரர்.

* இரண்டாவது நாளாக ஆற்றுக்குள் தேடுதல் வேட்டை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், வழக்கறிஞர் அருளின் நண்பரான திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞரும், கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலருமான ஹரிதரன்(39) கைது செய்யப்பட்டார். விசாரணையில், அருள் தனது நண்பரான ஹரிதரனிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாக பேசிய 6 செல்போன்களை கொடுத்துள்ளார்.

அந்த செல்போன்களை வெங்கத்தூர் கூவம் ஆற்றில் தூக்கி வீசப்பட்டிருந்தது. ஆற்றில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையில் 3 செல்போன்களை போலீசார் மீட்டனர். இதனையடுத்து 2வது நாளாக மெரினா மீட்பு குழுவினர், ஸ்கூபா குழு, திருவூர் தீயணைப்புத் துறையினருடன் இணைந்து நேற்று காலை 6.30 மணி முதல் செல்போன் மற்றும் சிம் கார்டுகளை ஆற்றுக்குள் தேடினர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 16 பேர் கைதான நிலையில் மேலும் 2 ரவுடிகளுக்கு தனிப்படை போலீசார் வலை: தேமுதிக வழக்கறிஞரிடம் விசாரணை, சீசிங் ராஜாவை பிடிக்க ராஜமுந்திரிக்கு விரைந்த தனிப்படை appeared first on Dinakaran.

Related Stories: