தமிழகத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு பயந்து பதுங்கல் புதுச்சேரியில் ரவுடிகள் கும்மாளம்: அடைக்கலம் கொடுத்து மதுவிருந்து அளிக்கும் விசுவாசிகள்

புதுச்சேரி: தமிழகத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு பயந்து புதுவையில் ரவுடிகள் தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களுக்கு விசுவாசிகள் அடைக்கலம் கொடுத்து மதுவிருந்து கொடுத்து பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கொலை சம்பவத்தில் முக்கிய நபராக செயல்பட்ட திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்துக்கு சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டை அருகே காட்டு பகுதியில் பதுங்கியிருந்த திருச்சி புத்தூர் ரவுடி துரை போலீசாரை அரிவாளால் வெட்டியதால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சூழலில், சட்டம், ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் உட்பட ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் ரவுடிகளை ஒழிப்பதில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஏ பிளஸ், ஏ, பி, சி ரவுடிகளின் பட்டியலை எடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்த ரவுடிகள் வெளிமாநிலங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், போலீசாரால் தேடப்படும் பல ரவுடிகள் புதுச்சேரியில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக ரவுடிகள் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் தங்கியிருப்பதாக புதுவை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஆனால் இந்த தகவல் தமிழக ரவுடிகளுக்கு எப்படியோ தெரியவரவே அவர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து காலி செய்தனர். இந்நிலையில் தமிழக ரவுடிகள் புதுச்சேரியில் உள்ள கூட்டாளிகளின் வீடுகள், பண்ணை வீடுகள் மற்றும் முந்திரி காடுகள், விவசாய பண்ணை நிலங்களில் உள்ள கொட்டகைகளில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு புதுவை ரவுடிகள் 3 வேளையும் மதுவுடன் அசைவ விருந்து வழங்கி அடைக்கலம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

The post தமிழகத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கைக்கு பயந்து பதுங்கல் புதுச்சேரியில் ரவுடிகள் கும்மாளம்: அடைக்கலம் கொடுத்து மதுவிருந்து அளிக்கும் விசுவாசிகள் appeared first on Dinakaran.

Related Stories: