கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு; வங்கதேச கலவரத்தால் இதுவரை 133 பேர் பலி: இன்று உச்ச நீதிமன்றம் விசாரிப்பதால் பதற்றம் அதிகரிப்பு

டாக்கா: தியாகிகளின் வாரிசுகளுக்கு ஆதரவான இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில் நடந்து கலவரத்தால் இதுவரை 133 பேர் பலியாகினர். கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சியில் உள்ளது. கடந்த 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2018ல் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, அந்த இடஒதுக்கீடு அப்போது ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், இதனை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் முடிவில், ‘தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை ஆளுங்கட்சி செயல்படுத்த முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் வங்கதேசத்தில் திரும்பும் திசையெல்லாம் கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது. தலைநகர் டாக்கா மட்டுமல்லாது நாடு முழுவதும் வன்முறையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 133 பேர் பலியாகி இருப்பதாகவும், 2,500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் நாட்டில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் சுமார் 15,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 8,500 பேர் மாணவர்கள் ஆவர். அங்கு தற்போது நிலவிவரும் கலவர சூழல் காரணமாக அங்குள்ள இந்திய மாணவர்கள் 1.000 பேர் நாடு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து மேகாலயா வழியாக 284 பேர் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இவர்களில் 168 நேபாள நாட்டவர்கள், 115 இந்தியர்கள் (எட்டு மாணவர்கள் உட்பட), ஒரு கனடா நாட்டவர் அடங்குவர். கடந்த மூன்று நாட்களில் மேகாலயா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 953-ஐ எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்யுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இதற்கிடையே நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கலவரக்காரர்களை கண்டதும் சுட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் வங்கதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.

The post கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு; வங்கதேச கலவரத்தால் இதுவரை 133 பேர் பலி: இன்று உச்ச நீதிமன்றம் விசாரிப்பதால் பதற்றம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: