ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து சிக்கும் அரசியல் கட்சியினர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கைது: மொத்த செல்போன் ஆதாரங்களை எரித்து கொசஸ்தலை ஆற்றில் வீசியது அம்பலம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்திய விசாரணையில், ஒட்டுமொத்த செல்போன் ஆதாரங்களையும் எரித்து, கொசஸ்தலை ஆற்றில் வீசியது தெரியவந்தது. செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 16 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேரடியாக கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் பண பரிமாற்றம் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக முன்னாள் பாஜ பிரமுகர் அஞ்சலை ரூ.10 லட்சம் வரை, வக்கீல் ஹரிகரனுக்கு பண உதவி செய்தது தெரியவந்துள்ளது. அஞ்சலையிடம் இருந்து வாங்கிய பணத்தை தனது நண்பர்களின் ஜிபேக்கு அனுப்பி, அதை பணமாக எடுத்து, கொலையாளிக்கு கொடுத்தது தெரியவந்தது. போலீசார் தன்னை நெருங்குவதை தெரிந்து ெகாண்ட அஞ்சலை, தலைமறைவானார்.

நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். அவரை கொண்டித்தோப்பில் உள்ள காவலர் குடியிருப்பில் உள்ள குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அலுவலகத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
இவர், கொலையாளிகளுக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார், யாருக்கெல்லாம் பணம் கொடுத்துள்ளார் என்பதை தெரிந்துகொள்ள அவரது 2 வங்கி கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். வியாசர்பாடி மற்றும் ஓட்டேரியில் உள்ள வங்கிகளில் அஞ்சலையின் பண பரிவர்த்தனை விவரங்களை கேட்டு அதனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள், வங்கி புத்தகங்கள் சிக்கியுள்ளன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் கொலை திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க புழல், சித்தூர், அரக்கோணம், திருநின்றவூர் ஆகிய இடங்களில் பலமுறை நடந்த சதி திட்ட ஆலோசனை கூட்டங்களில் அஞ்சலை பங்கேற்றதாகவும் கொலையாளிகளின் கை செலவுக்காக தனது ஆட்களை அனுப்பி நேரடியாகவே பணத்தை கொடுத்ததாகவும், கடந்த ஜூன் மாதம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான முழுமையான திட்டம் உருவாக்கியதும் தெரியவந்தது. குறிப்பாக, வேலூரில் வைத்து ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவை வழக்கறிஞர் அருள் சந்தித்து ஆம்ஸ்ட்ராங்கை இதற்கு மேல் விட்டு வைத்தால் பலருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார்.

அப்போது அஞ்சலை உடனிருந்ததாக தெரிகிறது. இதற்காக அப்போது ஆற்காடு சுரேஷின் தங்க பிரேஸ்லெட்டை பொன்னை பாலு அருளுக்கு கொடுத்துள்ளார். அதை ரூ.3.50 லட்சத்திற்கு விற்று ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கூலிப்படையை தயார் செய்ய சொன்னதும், விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அருள், பிரபல ரவுடியும் தூத்துக்குடியை சேர்ந்தவருமான சம்பவ செந்திலை தொடர்பு கொள்ள, அவரது கூட்டாளியான ஹரிகரனை ஜூன் 14ம் தேதி அருள் சந்தித்துள்ளார். பின்னர் பணம் கைமாறிய நிலையில், சம்பவ செந்தில் நாட்டு வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை தயார் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக தென் மாவட்டங்களில் பயன்படுத்தப்படும் கோடாரி போன்ற கூர்மையான கத்தியை அருள் வாங்கியதும், அவற்றை வைத்து தான் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. வழக்கறிஞர் ஹரிகரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது ஸ்மார்ட் போனைஆராய்ந்து பார்த்தபோதுசம்பவ செந்திலுடன் இன்ஸ்டாகிராம் மற்றும் டெலிகிராம் மூலமாக மட்டுமே அவர் பேசியிருப்பதும் சம்பவ செந்தில் ஆன்லைன் வாயிலாக பல்வேறு உத்தரவுகளை கொடுத்த நிலையில் அந்த செல்போன் எண்ணை வைத்து தனிப்படை போலீசார் பிரபல ரவுடி சம்பவசெந்திலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அந்த வகையில், 5 இன்ஸ்பெக்டர்களை உள்ளடக்கிய 5 தனிப்படை போலீசார் சம்பவ செந்திலை தேடி வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். அவரை கைது செய்யும் பட்சத்தில் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த ஹரிதரன் (37), வழக்கறிஞராக பணியாற்றி வருவதும், அதிமுக கட்சியில் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராகவும், கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலராகவும் உள்ள இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிகரன் மற்றும் அருளின் நெருங்கிய நண்பர். அருள் இவ்வழக்கில் குற்றவாளிகள் பயன்படுத்திய 6 செல்போன்களை, ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு ஹரிகரனிடம் ஒப்படைத்துள்ளார். அவர் இந்த 6 செல்போன்களையும் தனது நண்பரான அதிமுக பிரமுகர் ஹரிதரனிடம் ஒப்படைத்து அதனை அப்புறப்படுத்தும்படி கூறியுள்ளார். ஹரிதரன் 6 செல்போன்களையும் எரித்து, சேதப்படுத்தி திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூரில் உள்ள கொசத்தலை ஆற்றில் வீசி எறிந்துள்ளார்.

தனிப்படை காவல் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வு செய்து கொசஸ்தலை ஆற்றில் இருந்து 3 செல்போன்களை மீட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு பல நாட்களுக்கு முன்பு தொடர்ந்து கொலை திட்டத்திற்கான சதி வலை செல்போன் மூலமாக தீட்டப்பட்டதும் செல்போன் போலீசாரிடம் சிக்கினால் பல தகவல்கள் வெளிவரும் என்பதால் கொலையாளிகள் அதனை மொத்தமாக அப்புறப்படுத்தியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்ற செல்போன்களை கண்டுபிடிக்க மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையடுத்து, ஹரிதரன் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே அதிமுக பெண் வழக்கறிஞர் மலர்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிகரன் ஆகிய வக்கீல்கள் கைது செய்யபட்டுள்ள நிலையில், தற்போது அதிமுக கவுன்சிலரும் வக்கீலுமான ஹரிதரன் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் கடம் பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஹரிதரனை அதிமுகவில் இருந்து நீக்கியதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

* மனித உரிமை ஆணையத்தில் மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக பிரமுகர் மற்றும் பாஜ பிரமுகர் அஞ்சலை உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பவ செந்தில் மற்றும் சீசிங் ராஜா உள்ளிட்ட சிலரை போலீசார் இந்த வழக்கில் தேடி வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது வேலூரில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நாகேந்திரன் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த நிலையில் உள்ளன. இதையடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவரை சென்னை அழைத்து வரும்போது என்கவுன்டர் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும், வேலூர் சிறையில் நாகேந்திரனுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவரது மனைவி விசாலாட்சி தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

* அஞ்சலை வீட்டில் ஆவணங்கள் சிக்கின
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலையின் புளியந்தோப்பு வீட்டில் தனிப்படை போலீசார் நேற்று சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டிலிருந்து, டேப், 5 செல்போன்கள், வங்கி பாஸ்புக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

* கமிஷனர் அருண் அமைத்த சிறப்பு புலனாய்வு படை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கூலிப்படையினர் பல கொலைகளை செய்துள்ளனர். அந்தக் கொலைகளில் சிலர் வக்கீல்கள் மூலம் சரண் அடைவார்கள். ஆனால் அவர்கள் உண்மையான கொலையாளிகளாக இருக்க மாட்டார்கள். கூலிப்படையினருக்கு பணம் கொடுத்தவர்களும் சிக்கமாட்டார்கள். சரண் அடைகிறவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லாததால் அவர்களும் வழக்கில் இருந்து தப்பிவிடுவார்கள். அதேபோலத்தான் இந்த வழக்கிலும் போலீசில் 11 பேர் சரண் அடைந்தனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்காகத்தான் இந்தக் கொலை நடந்தது என்பதை காட்டுவதற்காக அவரது தம்பியை சரண் அடைய வைத்தனர்.

அதை காரணமாக வைத்து, சரண் அடைந்தவர்களோடு வழக்கு விசாரணை முடிந்து விடும் என்று நினைத்தனர். ஆனால் அவர்களின் போதாத நேரம், போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டார். வழக்கமாக வழக்கின் வேர் வரை சென்று விசாரிக்கும் பழக்கம் உடையவர், இந்த வழக்கிலும் ஆணிவேரையை பிடுங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக இணை கமிஷனர் விஜயகுமார், 3 உதவி கமிஷனர்கள், 11 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு படையை அமைத்துள்ளார். இவர்கள் இந்தக் கொலை விசாரணையை தவிர வேறு பணிகளை செய்வது இல்லை. இதனால்தான் அடுத்தடுத்து குற்றவாளிகள் ஆதாரங்களுடன் சிக்கி வருகின்றனர்.

இந்த வழக்கில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய குற்றவாளிக்கு தொடர்பு இருப்பதாக போலீசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர் சம்பவ செந்திலுக்கு நெருக்கமானவர். இதனால், அவரை நெருங்குவதற்கு முன் முழுமையான ஆதாரத்தை கையில் எடுத்த பிறகு அவர் போலீசின் வளையத்துக்குள் வருவார் என்று கூறப்படுகிறது. அருண், ஏற்கனவே சிபிசிஐடியில் எஸ்பியாக இருந்தவர் என்பதால், அந்த அனுபவத்தை வைத்து போலீஸ் அதிகாரிகளுக்கு தினமும் உரிய உத்தரவுகளை வழங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் சிபிஐ மற்றும் சிபிசிஐடியின் வேகத்தை விட சென்னை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து சிக்கும் அரசியல் கட்சியினர் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கைது: மொத்த செல்போன் ஆதாரங்களை எரித்து கொசஸ்தலை ஆற்றில் வீசியது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: