ஆயிரம் முறை வந்தாலும் பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: பிரதமர் மோடி ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக இளைஞர் அணி 44 ஆண்டுகளைக் கடந்து 45ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. அந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக 45ம் ஆண்டு தொடக்க விழா திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான‌ உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அன்பகத்தில் இன்று நடந்தது. விழாவிற்கு இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், இன்பா ஏ.என்.ரகு, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், ஜி.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, வருவாய் மாவட்ட வாரியாக இளைஞர் அணியின் சமூக வலைத்தளப் பக்கங்களையும், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சியையும் இளைஞர் அணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான‌ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக இளைஞர் அணி இன்றோடு 44 ஆண்டுகள் முடிந்து, 45ம் ஆண்டில் வெற்றிக்கரமாக அடியெடுத்து வைக்கிறோம். அதற்காக இந்த நேரத்தில் மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பொறுப்பில் இருக்கிறோம் என்றால் மிகப்பெரிய பெருமை. அந்த வாய்ப்பை அளித்த திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இங்கு பேசும் போது சொன்னார்கள், நான் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து அனைத்து தேர்தலிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று. அதற்கு எனக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து, உத்வேகத்தை கொடுத்திருக்கின்ற அமைப்பாளர், துணை அமைப்பாளர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திமுகவில் பல அணிகள் இருந்தாலும், அதில் முதல் அணி இளைஞர் அணி என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அதை நாம் நிரூபித்தும் காட்டியிருக்கிறோம்.

நாடாளுமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட பிரதமர் மோடி 6 முறை, 7 முறை தமிழ்நாட்டிற்கு வந்தார். எந்த முறையும் இல்லாத அளவுக்கு எப்படியாவது 2 சீட், 3 சீட் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். அப்பவே நான் சொன்னேன். 6 முறை அல்ல ஆயிரம் முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எங்கள் தலைவரையும், சமூக நீதியையும் தான் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று. அதை நிரூபித்து காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கும், 40க்கு 40 தொகுதி வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு இளைஞர் அணி சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். விக்கிரவாண்டி தேர்தல் வெற்றியில் உங்கள் பங்கு முக்கியமானதாக உள்ளது. இதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

முதல்வர் கோட்டையில் நிகழ்ச்சியில் இருந்தாலும், அவரின் முழு நினைப்பும் இந்த அன்பகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இருக்கும். நேற்று இரவு 11 மணியளவில் தொலைபேசியில் அழைத்து இளைஞர் அணிக்கு 45வது பிறந்தநாளா என்று வாழ்த்தினார். இன்றைக்கு காலையில 8 மணிக்கு தொலைபேசியில் அழைத்து இளைஞர் அணிக்கு எனது வாழ்த்துக்கள் என்று சொன்னார். தலைவர் எந்த பொறுப்புக்கு சென்றாலும், மிகப்பெரிய பொறுப்பை அடைந்தாலும் மாநில இளைஞர் அணி செயலாளர் என்ற பதவி, எப்போதும் இளைஞர் அணிக்கு பிராண்ட் அம்பாசிடர் என்றால் அது தலைவர் தான். அதை தான் அவரும் விரும்புவார். ஏனென்றால், உழைத்து இருக்கிறார். இன்றைக்கு இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வந்து இருக்கிறார் என்றால், அதற்கு இளைஞர் அணி தான் அடித்தளமிட்டது.

பாஜக கட்சி வெறும் பொய்களையே பரப்பி, பொய்களை மட்டுமே பேசி அரசியல் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். நம்முடைய இயக்கத்துக்கு தான் திராவிட வரலாறு இருக்கிறது. சமூக வலைத்தளம் முக்கிய பங்கு வகிக்கிறது.  அனைவரும் சமூக வலைத்தளத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும். இளைஞர் அணிக்கு கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு ஒவ்ெவாரு தொகுதிக்கும் ஒரு நூலகம் தொடங்க வேண்டும் என்று தலைவர் கட்டளையிட்டு இருந்தார். அதே போல 234 தொகுதிகளில் 50 தொகுதிகளில் இளைஞர் அணி சார்பில் நூலகங்களை தொடங்கி இருக்கிறோம். மீதமிருக்கின்ற சட்டமன்ற தொகுதிகளில் விரைவில் நூலகங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு, மாணவர்களுக்கு அது உபயோகமாக இருக்கும். விரைவில் ஒன்றியம், பேரூர், பகுதி அளவில் நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பேசிய நிறைய பேர், தீர்மானம் எல்லாம் நிறைவேற்றியிருக்கிறீர்கள், முதலமைச்சருக்கு துணையாக நான் வர வேண்டும் என்று.

பத்திரிகைகளில் வருகின்ற கிசுகிசுக்கள், வதந்திகளை எல்லாம் படித்து விட்டு வந்து, இது நடக்க போகிறதோ? அப்போ நாம் முதலில் துண்டு போட்டு வைத்து விடுவோம் என்ற அடிப்படையில் பேசியிருக்கிறீர்கள். எப்படி தலைவர் எந்த பொறுப்புக்கு சென்றாலும், அவர் பலமுறை சொல்லியிருக்கிறார், இளைஞர் அணி பொறுப்பு தான் அவர் மனதுக்கு மிக, மிக நெருங்கிய பொறுப்பு. துணை முதலமைச்சர் என்று பத்திரிகை நண்பர்கள் பல முறை என்னிடம் கேட்ட போது சொன்னேன். எல்லா அமைச்சர்களும் எங்கள் முதல்வருக்கு துணையாக தான் இருப்போம் என்று சொன்னேன். இங்கே வந்திருக்கின்ற அனைத்து அமைப்பாளர்களுமே முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும் எனது மனதிற்கு மிக மிக நெருங்கிய பொறுப்பு என்றால் அது இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பு தான்.

எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞர் அணியை மறந்து விட மாட்டேன். இருக்க வேண்டிய பணிகள் ஏராளம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக உழைத்தோமோ?, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றிக்காக உழைத்தோமோ? அதே போல மிகமிக முக்கியமான தேர்தல் 2026 சட்டப்பேரவை தேர்தல். நமது திமுக அரசின் திட்டங்களை, சாதனைகளை, குறிப்பாக தேர்தல் ரிசல்ட் வந்தற்கு பிறகு ஆய்வு செய்து பார்த்தோம். எந்த முறையும் இல்லாத அளவுக்கு திமுகவுக்கு பெண்கள், தாய்மார்கள் வாக்களித்துள்ளார்கள். அந்த அளவுக்கு தலைவரின் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஆகிய 2 திட்டங்களும் பெண்களிடம் நமது கழகத்திற்கும், அரசுக்கும், தலைவருக்கும் மிகப்பெரிய நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு வந்துள்ளது. அதே போல புதுமைப்பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் போய் சேர்ந்தாலும் அவங்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வருடமும் இரண்டரை லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இதன் மூலம் மாணவிகள் கல்லூரிகளில் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தலைவர் அந்த திட்டத்தை மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தியிருக்கிறார். ஆகஸ்ட் முதல் விரிவுப்படுத்த போகிறார்கள். இதனை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். எந்த கூட்டணி வந்தாலும் சரி. ஜெயிக்க போவது நம்முடைய கழக தலைவர் தான். மீண்டும் தமிழ்நாட்டை ஆளப்போவது நமது தலைவர் தான். இது தான் இளைஞர் அணியின் இலக்காக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஆயிரம் முறை வந்தாலும் பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: