அம்மா உணவகங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதற்கு மேயர் பிரியா கண்டனம்..!!

சென்னை: அம்மா உணவகங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதற்கு மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உணவின் தரம், அளவு, சுவை குறித்து நேரில் ஆய்வுசெய்தார். ஏழைகள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகத்தை சிறப்பாக நடத்த வேண்டும். சமையல் கூடம், பரிமாறும் இடத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தரம், சுவையுடன் உணவுகளை தயாரிக்க அம்மா உணவக ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். இத்தகைய அம்மா உணவகங்களின் செயல்பாட்டை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக மேயர் பிரியா தனது எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்தார் அதில்,

கழக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை!

கட்சி மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் தனிப்பெருந்தலைவராக, மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் தொண்டாற்றும் மனிதநேயராக முதலமைச்சர் திகழ்கிறார்கள்; அவரது அகராதியில் அரசியல் காழ்ப்புணர்வு என்ற சொல்லோ, சிறுமதியோ ஒருநாளும் இருந்தது இல்லை.

திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார். இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post அம்மா உணவகங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டது குறித்து எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதற்கு மேயர் பிரியா கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: