அரசு கருவூலம் காலியாக உள்ளது பிறகு எப்படி நிதி வழங்க முடியும்? ஆர்.அசோக் கேள்வி

சட்டப்பேரவையில் மழை வெள்ளம், நிவாரணம் தொடர்பாக அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான நிதி இருக்கிறது, இன்னும் தேவைப்பட்டால் கூடுதலாக ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார். அப்போது குறுக்கிட்டு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் பேசியதாவது: உத்தரவாத திட்டங்களுக்காக எஸ்சி.,எஸ்டி சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. வால்மீகி நலவாரியத்தில் ரூ.187 கோடி கொள்ளை அடிக்கப்பட்டு விட்டது. வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பால் விலை உயர்வின் போது விவசாயிகளுக்கு அதன் பயன் கிடைக்கும் என அரசு உறுதி அளித்தது. ஆனால், பால் விவசாயிகளுக்கு தர வேண்டிய மானியம் சுமார் ரூ.900 கோடி இன்னமும் வழங்கப்படவில்லை. அரசு கருவூலத்தில் பணம் இல்லாத நிலையில், மழை நிவாரணத்திற்கு எத்தனை கோடி என்றாலும் தருவதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா கூறுகிறார். மாநில அரசு கருவூலத்தில் எவ்வளவு நிதி இருக்கிறது ? என்கிற விபரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கருவூலம் காலியான நிலையில் நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு எப்படி நிதி வழங்க முடியும்? இவ்வாறு ஆர். அசோக் கேள்வி எழுப்பினார்.

* எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தர்ணா: ஹியர் போன்களுடன் காங்கிரஸ் உறுப்பினர்கள்
சட்டப்பேரவை தொடங்கிய உடனே சபாநாயகர் இருக்கை முன்பு எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக் தலைமையில் பாஜ மற்றும் மஜதவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் யுடி காதர், இருக்கைக்கு திரும்பி விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என பலமுறை வேண்டுகோள் விடுத்தார். இதை கேட்காமல் எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதியில் நின்று முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும், ஊழலை மூடி மறைக்கும் அரசு என தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருந்தனர். அவை காலை முதலில் தொடங்கியது முதல் பகல் 3 மணி வரை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு கோஷம் எழுப்பி கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவையில் கூச்சல் அதிகமாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் யுடி காதர், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஹியர் போன்களை மாட்டிக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகரின் வேண்டு கோளை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹியர்போனை மாட்டிக்கொண்டு முதல்வர் சித்தராமையாவின் பதில் உரையை கவனித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* பாஜவினருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை: காங்., உறுப்பினர் நாராயணசாமி
சட்டப்பேரவையில் மழை சேதம் தொடர்பாக காங்.,உறுப்பினர் நாராயணசாமி பேசியதாவது: அரசின் உத்தரவாத திட்டங்களால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக கிரக லட்சுமி, சக்தி திட்டங்கள் பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முதல்வர் சித்தராமையா பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய சமுதாயத்தினர் மட்டும் இன்றி அனைவரின் நலனிற்காக திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. பாஜ ஆட்சியில் 4 வருடத்தில் ஒரேயொரு வீடு கூட கட்டப்படவில்லை. அதே நேரம் முதல்வர் சித்தராமையா பதவி ஏற்ற பிறகு வீடு கட்டுவதற்கான திட்டத்திற்கு நிதி அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவிய போது பாஜவினர் மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்தனர்.

தற்போது மழை பெய்து வரும் நிலையில் அது பற்றிய அக்கறை சிறிதுமின்றி பாஜவினர் அவை முடங்கும் வகையில் தர்ணாவில் ஈடுபடுகின்றனர். மக்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வில்லை. மக்கள் மீது பாஜவிற்கு அக்கறை இல்லை என்பதற்கு இதுவே உதாரணமாகும். இதைத்தொடர்ந்து சரத்குமார் பச்சேகவுடா, தரிகெரே சீனிவாஸ், அசோக் , மஞ்சுநாத் உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மலை நாடு , கடற்கரை பகுதிகளில் மழையின் காரணமாக மக்கள் தவிக்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில் ரோடுகள் சேதம் அடைந்துள்ளன. மின்கம்பங்கள் சரிந்துள்ளன. எனவே, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பேசினர் .

* ஆளுங்கட்சி உறுப்பினர்களை வம்பிற்கு இழுத்த பாஜ: அமைதி காத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்
சட்டப்பேரவை நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் யுடி காதர், காங்.,உறுப்பினர் பொன்னண்ணாவை மழை சேதம், நிவாரணம் குறித்து பேசுவதற்கு அனுமதி அளித்தார். இதன் மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதீஸ்வர், சிவலிங்கேகவுடா, எம்.நாராயணசாமி, மஞ்சுநாத் உள்ளிட்டோர் மழை சேதம், தக்காளி உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்ட விபரத்தை விவரித்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவை சுமுகமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என பிரதீஸ்வர், சிவலிங்கே கவுடா உள்ளிட்டோர் வலியுறுத்தியதால் இரண்டு தரப்பினரும் காரசாரமாக மோதிக்கொண்டனர். சபாநாயகர் யுடி காதர், எதிர்க்கட்சி உறுப்பினர்களை கண்டு கொள்ளாமல் பேசுங்கள் என காங்.,உறுப்பினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதையடுத்து பிரதீஸ்வர் , சிவலிங்கே கவுடா அமர்ந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் அசோக் , பிரதீஸ்வர் , சிவலிங்கேகவுடா நன்றாக பேசுகின்றனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அத்துடன் கமான் பிரதீஸ்வர், கமான் என குரல் எழுப்பியதால் பிரதீஸ்வர் எழுந்து எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளித்தார். இவ்வாறு இரண்டு மூன்று முறை பிரதீஸ்வர் பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து அரசு தலைமை கொறடா அசோக் பட்டன், பிரதீஸ்வர் இருக்கைக்கு சென்று அமைதியாக இருக்கும்படி கூறினார். அவையில் எந்த அலுவலும் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தில் பிரதீஸ்வர் மற்றும் சிவலிங்கே கவுடாவை எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோக் தலைமையிலான அக்கட்சினர் வம்பிற்கு இழுக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* எதிர்க்கட்சிகளின் தொடர் தர்ணா தடை ஏற்படுத்திய சபாநாயகர்
கர்நாடக சட்டப்பேரவை நேற்று காலை 10.45 மணி அளவில் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தர்ணா காரணமாக அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை 12 மணி அளவில் தொடங்கினாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆளுங்கட்சி உறுப்பினர்களிடம் , ஹியர் போனை அணிந்து கொள்ளுங்கள் என சபாநாயகர் அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவையில் மழை வெள்ள சேதம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பிற்பகல் வரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதற்கிடையே முதல்வர் சித்தராமையா அவையில் எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார். அப்போது பேசிய சபாநாயகர் யுடி காதர், “மழை அதிகம் பெய்கிறது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் உறுப்பினர்கள் பாதுகாப்பாக தொகுதிக்கு செல்ல வேண்டும் என கூறி அவை திங்கட்கிழமை காலை 10 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். சபாநாயகர் யுடி காதரின் இந்த அறிவிப்பு, பாஜவினரின் தொடர் தர்ணாவுக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அரசு கருவூலம் காலியாக உள்ளது பிறகு எப்படி நிதி வழங்க முடியும்? ஆர்.அசோக் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: