முதியோரை பாதிக்கும் மறதி நோய்!..

நன்றி குங்குமம் டாக்டர்

முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்

வாழும் நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க முதுமை சார்ந்த நோய்களும் அதிகரிக்கின்றன. அந்த வகையில், டிமென்சியா, அல்சைமர் என்று சொல்லும் மறதி நோயும் ஒன்று. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த மறதிநோய் ஒரு பெரும் தொல்லை தரும் நோயாக உள்ளது. இந்த மறதி நோய் தைராய்டு தொல்லை, ரத்தசோகை, மிக உயர் ரத்த அழுத்தம், வைட்டமின் குறைவு, மூளையில் கட்டி, மனச்சோர்வு போன்றவையினால் பெரும்பாலும் ஏற்படுகிறது.

அல்சைமர் என்னும் டிமென்சியா நோயைப் பூரணமாகக் குணப்படுத்தமுடியாது. ஆனால், இந்நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தைக் குறைத்து நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவுக்கு நல்லபடியாக வைத்துக் கொள்ளமுடியும்.இந்நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது சற்றுச் சிரமம்தான். ஆனால், மக்களிடையே இந்நோயைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டால் முடியாதது ஏதுமில்லை.

அதுபோன்று, முதியோர் நலம், மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவர்கள் இந்நோய்க்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களிடம் வரும் வயதான நோயாளிக்கு அவர்கள் மறதிநோயைப் பற்றி ஏதும் கூறாமல் இருந்தால் கூட மறதிநோய் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். இதன்மூலம் இந்த மறதிநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய தக்க சிகிச்சையை அளிக்க முடியும். மேலும் அரசாங்கம், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் நடத்தப்படும் மருத்துவ முகாம்களிலும் மறதி நோயைக் கண்டறிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதுபோன்று வீட்டிலுள்ளவர்கள் தங்களுடன் இருக்கும் பெரியவர்களின் நடை, உடை, பாவனைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் கூட அது டிமென்சியாவாக இருக்கலாம் என்று எண்ணி உடனே சிறப்பு மருத்துவர்களை அணுகுவது அவசியமாகும்.

வயதானவர்கள் முக்கியமாக 70 வயதைக் கடந்தவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது சிறப்பு மருத்துவரிடம் சென்று மறதிநோயைக் கண்டறியும் பரிசோதனையைச் செய்துகொள்வது மிகவும் முக்கியம். டிமென்சியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று தனியாகச் சுமார் 10 படுக்கைகள் கொண்ட வார்டு ஒன்றை எல்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும், மாவட்டம் மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சிசெய்ய வேண்டும்.

பெரிய நகரங்களில் பகல்நேர மையங்களைத் தொடங்கலாம். (டிமென்சியா டே கேர் சென்டர்) இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்தின் விலை அதிகமாக இருப்பதாலும் அவர்கள் வருடக் கணக்கில் தொடர் சிகிச்சை பெற வேண்டி இருப்பதாலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவரை மருத்துவக் காப்பீட்டில் உள்ளடக்கி இலவசச் சிகிச்சை அளிக்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் கொண்டுவந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை மறதிநோய் என்பது மக்களிடையே மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது நாளுக்கு நாள் மறதிநோய் அதிகரித்துவருகிறது. இதில் சுமார் 5.8 சதவீத பேருக்கு மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டு மறதி ஏற்படுகிறது.

அதுபோன்று குடும்பத்தில் யாருக்காவது மறதிநோய் இருந்தாலோ அல்லது சிறுவயதில் தலைக்காயம் ஏற்பட்டிருந்தாலோ இளம் வயதிலேயே மறதிநோய் வர வாய்ப்பு அதிகமுண்டு. ஆகையால் இளம் வயதில் மறதிநோய் ஏற்பட்டால் அதற்குச் சிறப்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.

மறதி நோய் வராமல் தடுக்க:உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், மாரடைப்பு மற்றும் தைராய்டு நோய்கள் போன்ற தொல்லைகள் இருப்பின் அதற்குத் தக்க சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலம் மூளையின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி ஞாபகசக்தியைக் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்.

தினசரி காலை மற்றும் மாலையில் சுமார் அரை மணி நேரம் உடல் வெயிலில் படுமாறு செயல்பட்டால் மறதிநோய் வருவது வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு.சுமார் 8 மணி நேரத் தூக்கம் அவசியம்/ இதைக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தினமும் காலையிலும் மாலையிலும் குறைந்தது 15 – 20 நிமிடங்களாவது தியானம் மற்றும் பிராணாயாமத்தைக் கடைபிடித்தால் மறதியை வெல்ல முடியும். மறதியைத் தவிர்க்க சத்தான உணவுகள் அவசியம்.

கீழ்க்காணும் உணவு வகைகள் பல ஆராய்ச்சிகளுக்குப் பின்பு நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் நமக்குத் தெரிந்தவை தானே என்று அலட்சியப்படுத்த வேண்டாம். பின்வரும் உணவுகளில் ஒன்றுக்கு மேற்பட்டவற்றைத் தினசரி நாம் உண்ணும் உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டால் எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்கும்.

பசலைக்கீரை, ஸ்ட்ராபெர்ரி மற்றும் புளூபெர்ரி, ஆப்பிள், வெங்காயம், மீன்களில் முக்கியமாக டுனா மீன் (சூரை மீன்), மீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ராஜ்மா, உலர்ந்த திராட்சை, வாழைப்பழம், கிரீன் டீ, வால்நட், முளைகட்டிய கோதுமை, காபி, பட்டை மற்றும் வல்லாரைக்கீரை ஆகும்.மேற்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் கடைபிடித்து வந்தால் மறதிக்கு குட்பை சொல்லிவிடலாம்.

The post முதியோரை பாதிக்கும் மறதி நோய்!.. appeared first on Dinakaran.

Related Stories: