அய்யலூரில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

வேடசந்தூர், ஜூலை 19: அய்யலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வங்கி தாழ்வான பகுதியில் கரடு முரடாக இருப்பதால் மூன்று சக்கர பைக்கில் வருபவர்கள் தடுமாறும் நிலை உள்ளது, இதனை சரிசெய்து தர வேண்டும்,

மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் வங்கி வாசல், ஏடிஎம்மில் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் முறையாக அமைக்க வேண்டும், வங்கி வாசலில் சக்கர நாற்காலி வைக்க வேண்டும், வங்கிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வரிசையில் நிற்காமல் முன்னுரிமை தர வேண்டும், உயரம் வளர்ச்சி தடைபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கவுண்டர் வேண்டும்,

வங்கிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை ஊழியர்கள் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த எரியோடு இன்ஸ்பெக்டர் வேலாயுதம், வடமதுரை எஸ்ஐ சித்திக் ஆகியோர் வங்கி மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உரிமைகளை வழங்குவதாக கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

The post அய்யலூரில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: