திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் நடைபெறும் தெப்பத்திருவிழா ஏற்பாடுகள் ஆய்வு: துறை அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் அறிவுறுத்தல்

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில், ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழாவை முன்னிட்டு விழா ஏற்பாடுகள் குறித்து கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புகழ்ப்பெற்ற முருகன் கோயிலில் வரும் 27ம் தேதி ஆடி அஸ்வினியுடன் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து, 28ம் தேதி ஆடி பரணி, 29ம் தேதி ஆடிக்கிருத்திகை அன்று மாலை சரவண பொய்கை திருக்குளத்தில் முதல் நாள் தெப்பத்திருவிழா உட்பட ஐந்து நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்த உள்ளனர். விழா தொடங்க 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் முருகன் மலைக் கோயிலில் வர்ணம் தீட்டுவது, மின் விளக்குகள் பொறுத்துவது, குடிநீர், தற்காலிக பந்தல்கள் அமைப்பது ஆகிய பணிகள் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன் தலைமையில் கோயில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அருணாச்சலம் மேற்பார்வையில் அறங்காவலர்கள் மோகனன், சுரேஷ்பாபு, நாகன், உஷா ரவி ஆகியோர் செய்து வருகின்றனர். இந்நிலையில், அனைத்து துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைந்து ஆடிக்கிருத்திகை விழா முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தீபா தலைமையில் நடைபெற்றது.

டிஎஸ்பி விக்னேஷ் முன்னிலை வகித்தார். திருக்கோயில் இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) அருணாச்சலம், நகராட்சி ஆணையர் அருள், நெடுஞ்சாலைத் துறை கோட்ட உதவி பொறியாளர் ரகுராமன், வட்டாட்சியர் மலர்விழி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். திருத்தணியில் வாகன நெரிசல் தடுக்கும் வகையில் நகரில் வெளிப்புற பகுதியில் 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பது, முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது, பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழ்நாடு, ஆந்திராவுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது, தடையின்றி மின்சாரம் வழங்கவும், குடிநீர், தற்காலிக கழிப்பிட வசதி, தெரு விளக்குகள் அமைப்பு, மருத்துவ முகாம், தூய்மை பணிகள், முடி காணிக்கை மையங்கள் உட்பட வசதிகள் செய்து ஏற்படுத்துவது தொடர்பாக துறை ரீதியாக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைய உள்ள சித்தூர் சாலை, பைபாஸ் சாலை, திருக்குளம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கோட்டாட்சியர் தீபா அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப் – இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி, வருவாய் ஆய்வாளர் தினேஷ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையில் நடைபெறும் தெப்பத்திருவிழா ஏற்பாடுகள் ஆய்வு: துறை அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: