இதன் அடிப்படையில் 6 பேரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்வதற்கு அளிக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது வழக்கறிஞர் மலர்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று கைது செய்தனர். இதில் வழக்கறிஞர் மலர்கொடி அதிமுக பேச்சாளரும் மறைந்த பிரபல தாதாவுமான தோட்டம் சேகரின் மனைவியாவார். கடந்த 2001ம் ஆண்டு தோட்டம் சேகர் ரவுடி சிவக்குமார் என்பவரால் கொலை செய்யப்பட்டார். தோட்டம் சேகரின் மகன்கள் 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2021ம் ஆண்டு ரவுடி சிவக்குமாரை அசோக் நகரில் வைத்து கொலை செய்தனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அருள் என்பவருடன் மலர்கொடி தொடர்பில் இருந்துள்ளார். அருளின் வங்கி பணபரிவர்த்தனையை ஆய்வு செய்தபோது மலர்கொடிக்கு லட்சக்கணக்கில் பணம் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் நாட்டு வெடிகுண்டுகள் மலர்கொடி மூலம் அருளுக்கு சென்றுள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் ஹரிஹரனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே திருநின்றவூரை சேர்ந்த சதீஷ், அருளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். நேற்று கைதான 3 பேருக்கும் ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்படுவார் என நன்கு தெரிந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இந்த கொலை வழக்கில் மேலும் பலர் கைதாகலாம் என்று தெரிகிறது.
இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக சிறுபான்மையினர் மண்டல் தலைவர் செல்வராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கொலையில் தொடர்புடைய வட சென்னை பாஜக மகளிரணி துணை செயலாளர் அஞ்சலை என்பவர் தலைமறைவாக உள்ளார். இவர் ரவுடி ஆற்காடு சுரேஷின் கள்ளக்காதலி. இவர் மீது புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது. தற்போது தனிப்படை போலீசார் அஞ்சலையை தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அஞ்சலை பண உதவி செய்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் அருள், சதீஷ் பெயரில் இந்த கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொலைக்கு பயன்படுத்திய ஐந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜ மகளிரணி நிர்வாகியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர வேட்டை: பண உதவி செய்தது அம்பலம் appeared first on Dinakaran.