வேலூர், ஜூலை 17:டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பருவ நிலை மாறி வரும் சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும் குடிநீரை பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் தரத்தை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரதுறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளன. எனவே, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் அனைத்து தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திலும் ஒரு இடங்களில் பரவல் தொடங்கி உள்ளது. இதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, எல்லையோர மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து காலி இடங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன் கொசு உற்பத்தி ஆகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பூச்சியில் நிபுணர்களுடன் இணைந்து டெங்கு கொசுக்கள் உருவாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் பரவுவதற்கு வழிவகுக்கும் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதைத் தடுக்க மக்கள் பயன்படுத்தும் நீரில் குளோரினேஷனை உறுதிசெய்யவும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களின் வளாகங்கள் ஏடிஸ் கொசு இல்லாத வளாகமாக உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் பிரத்யேக காய்ச்சல் வார்டு உருவாக்கப்பட்டு கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையாக மருந்து இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதனால் காய்ச்சல், டெங்கு இறப்புகளை தவிர்க்க முடியும். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்கும் சுகாதாரக் கல்வி குறித்தும் தங்கள் வீடுகள் மற்றும் வளாகங்களை கொசு உற்பத்தி இல்லாமல் வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கையாக அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் எந்த நேரத்திலும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post அதிகாரிகள் வலியுறுத்தல் டெங்கு பரவல் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.