குறிப்பாக, உள் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 370மிமீ மழை பெய்துள்ளது. கோவை 230மிமீ, தென்காசி 70மிமீ, கன்னியாகுமரி 60மிமீ, திருப்பூர் 50மிமீ மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு மட்டும் ரெட் அலர்ட் விடப்பட்டது. அங்கு ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்தது.
வெப்பநிலையை பொருத்தவரையில் 3 இடங்களில் மட்டும் நேற்று 98 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், நேற்று முன்தினம் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தெற்கு சத்தீஷ்கர் மற்றும் அதை ஒட்டிய விதர்பா நிலப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 19ம் தேதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தாலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வலுவான காற்றுடன் கூடிய மழை இன்று பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதே நிலை 22ம் தேதிவரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும், மத்திய மற்றும் அதை ஒட்டிய தென் அரபிக் கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்திலும் இன்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post வங்கக்கடலில் 19ம் தேதி புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.