2 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்க நகைபறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, அப்துல்சலீம் மற்றும் இளம்பாரதி, விஜய்மேகநாத் ஆகியோர், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதம். அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள் இந்த வழக்கு வராது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று வாதிட்டனர். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும், மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது எனவும் கூறி தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேபோல, சொத்து முடக்கத்தை நீக்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
The post மணல் குவாரி முறைகேடு விவகாரம் தொழிலதிபர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.