சுப்மன் கில் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!: அமித் மிஸ்ரா

மும்பை: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய நேரத்தில், சுப்மன் கில் தலைமையில் இன்னொரு டி20 அணி ஜிம்பாப்வே சென்றது. முதல் முறையாக கேப்டன் பொறுப்பு, இளம், அறிமுக வீரர்களுடன் சென்ற இந்தியா முதல் ஆட்டத்தில் தோற்றது. அதனால் உலக கோப்பையில் கிடைத்த தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. கூடவே விமர்சனங்களும் வந்தன. ஆனாலும் சுப்மன் தலைமையிலான இளம் இந்தியா அடுத்த 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்று தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்நிலையில், கேப்டனாக கில் செயல்பாடு குறித்து முன்னாள் ஸ்பின்னர் அமித் மிஸ்ரா நேற்று கூறியதாவது: ஐபிஎல் தொடரில் சுப்மன் எப்படி கேப்டனாக செயல்பட்டார் என்று பார்த்தோம். அவரிடம் கேப்டனுக்கான யோசனைகள் இல்லை. ஐபிஎல் தொடர்களிலும், இந்தியாவுக்காகவும் ஒரு வீரராக சிறப்பாக பங்களிக்கிறார்.

ஆனால் கேப்டனாக அந்த அளவுக்கு இல்லை. வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு கேப்டன் அனுபவம் வரவேண்டும் என்பதற்காக இந்த முயற்சியாக இருக்கலாம். என்னைப் பொருத்தவரையில் டி20 அணிக்கு கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்கலாம். இல்லாவிட்டால் ரிஷப் பன்ட், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பொருத்தமானவர்கள். ராகுல் டிராவிட் ஆதரவினால்தான் சுப்மன் கேப்டன் ஆனாரா என்பது எனக்கு தெரியாது. ஒவ்வொருவருக்கும் யாரையாவது பிடிக்கத்தான் செய்யும். அதனால் நான் சுப்மனை வெறுப்பவன் அல்ல. அவரை எனக்கு பிடிக்கும். நான் சொல்வது கேப்டன் பதவிக்கு மட்டும்தான். ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கேப்டன் பதவியை கையாண்ட விதம் நன்றாக இருந்தது. அதனால்தான் சுப்மனுக்கு பதில் இவர்களை கேப்டனாக நியமிக்கலாம் என்று சொல்கிறேன். இவ்வாறு அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.

 

The post சுப்மன் கில் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!: அமித் மிஸ்ரா appeared first on Dinakaran.

Related Stories: