தெலங்கானாவில் காலியாகும் சந்திரசேகரராவ் கட்சி பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார்

திருமலை: தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதில் சுமார் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அக்கட்சிக்கு 30 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதிக இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ரேவந்த்ரெட்டி முதல்வராக பதவி ஏற்றார். மேலும் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலிலும் பிஆர்எஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் தாவி வருகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களில் காங்கிரசுக்கு அணி தாவும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் பதான்செருவு பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏவும், சந்திரசேகரராவுக்கு நெருக்கமானவருமாக இருந்த மகிபால் ரெட்டியும் திடீரென காங்கிரசில் இணைந்தார். பி.ஆர்.எஸ். கட்சியின் ஜஹீராபாத் எம்.பி. வேட்பாளராக இருந்து தோல்வியடைந்த காலி அனிலும் காங்கிரசில் இணைந்தார். இவர்கள் இருவரும் முதல்வர் ரேவந்த்ரெட்டி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். இதுவரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், 6 எம்.எல்.சிக்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் காங்கிரசுக்கு தாவியுள்ளனர். இதன்மூலம் சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 75 ஆக உயர்ந்துள்ளது.

The post தெலங்கானாவில் காலியாகும் சந்திரசேகரராவ் கட்சி பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த 10வது எம்எல்ஏ காங்கிரஸில் இணைந்தார் appeared first on Dinakaran.

Related Stories: