ஜூலை 1ம் தேதி முதல் அமல் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வு: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு

சென்னை : தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை கடந்த 1ம் தேதி முதல் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, வணிகம், விவசாயம், தொழிற்சாலை என 3.3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் 2.47 கோடிக்கு மேல்உள்ளது. இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசு, தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான டான்ஜெட்கோவின் விநியோகம் தொடர்பான கடனில் 75 சதவீத கடன் தொகையான ரூ.30,420 கோடியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென உதய் திட்டம் கூறுகிறது. இதில் ரூ.22815 கோடி மாநிலம் ஏற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

உதய் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் எரிசக்தி அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளின்படி, மின் கட்டண மாற்றம் என்பது ஒன்றிய அரசின் திட்டங்களின் கீழ் நிதி பெறுவதற்கான கட்டாய முன் நிபந்தனையாகும். மேலும், ரிசர்வ் வங்கியும், ஒன்றிய அரசின் மத்திய நிதி நிறுவனங்களும், ஆண்டுதோறும் மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளன. மேலும் கட்டண உயர்வை அந்தந்த மாநில மின்சார வாரியங்கள் நிர்ணயிக்க முடியாது.

இதற்கென அமைக்கப்பட்டுள்ள தன்னாட்சி அமைப்பான மின்சார ஒழுங்கு முறை ஆணையம்தான் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் என்று ஒன்றிய அரசு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி 2027 வரை ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். 2026-27ம் ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன்படி 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் ஆகிய இரண்டில் எது குறைவோ, அந்த அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மின் கட்டணம் விகிதத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நேற்று தன்னிச்சையாக வெளியிட்டது.

இதன்படி தமிழ்நாட்டில் 4.83 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

கட்டண உயர்வு தொடர்பான முக்கிய அம்சங்கள்: வீட்டு இணைப்பு மற்றும் கைத்தறி மின் இணைப்புக்கு முதல் 400 யூனிட்களுக்கு தலா ரூ.4.80 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 401 முதல் 500 வரை ரூ.6.45ம், 501 முதல் 600 யூனிட்டுக்கு ரூ.8.55ம், 601 முதல் 800 யூனிட் வரை ரூ.8.65ம் , 801 முதல் 1000 யூனிட் வரை ரூ.10.70ம், 1000 யூனிட்டுக்கு மேல் ரூ.11.80ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதே போல் குடிசைகளுக்கான இணைப்புக்கு மாதந்திர கட்டணம் ரூ.307 மற்றும் யூனிட்டுக்கு ரூ.9.80 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பல வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான பொது மின்சார இணைப்புக்கான மாந்தந்திர நிலைக்கட்டணம் கிலோவாட்டுக்கு ரூ.107 எனவும், யூனிட் ஒன்றுக்கு ரூ.8.55 வசூலிக்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு 40 காசு உயர்த்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களுக்கான கட்டணம் யூனிட்டுக்கு 30 முதல் 35 காசு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடிசை தொழில்ளுக்கான கட்டணம் யூனிட்டுக்கு 20 முதல் 30 காசும், விசைத்தறிகளுக்கு யூனிட்டுக்கு 30 முதல் 35 காசும் உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 35 காசு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில், தமிழ்நாடு அரசு வழக்கமாக வழங்கும் இலவச மின்சாரம் என்று மானியம் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வீடு மற்றும் குடிசை மின் நுகர்வோருக்கு 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் வீட்டு இணைப்புகளுக்கான மானியமும் தொடரும் என்று தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டுதலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

* 1.26 லட்சம் விசைத்தறி இணைப்புகளுக்கு கட்டணம் உயராது
விசைத்தறி மின் இணைப்புகளில் 1000 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தும் 1.26 லட்சம் இணைப்புகளுக்கு (77.78 சதவீதம்) விலையில்லா மின்சாரம் தொடரும். 1001 யூனிட் முதல் 1500 யூனிட் வரை பயன்படுத்தும் 10 ஆயிரம் இணைப்புக்கு மாதம் ரூ.50ம், 1501 யூனிட்டுக்கு மேல் பயன்பாடு உள்ள 26 ஆயிரம் இணைப்புகளுக்கு மாதம் ரூ.88 மட்டுமே கட்டணம் உயரும்.

* 100 யூனிட் இலவசம் தொடரும்
1 கோடி பேருக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை மின் கட்டண மாற்றம் தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

* 2.47 கோடி வீட்டு மின் நுகர்வோரில் 1 கோடி பேருக்கு மின்கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.

* வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம், குடிசை இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

* வீட்டு மின் நுகர்வோர்களுக்கு நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் முழுவிலக்கு தொடர்கிறது.

* விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டு தலங்கள், தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடரும்.

* 2.19 லட்சம் சிறு, குறு தொழில் நுகர்வோருக்கு யூனிட்டுக்கு 20 பைசா மட்டுமே கூடுதல்.

* 22.36 லட்சம் வணிக நுகர்வோருக்கு மாதத்திற்கு ரூ.15 மட்டுமே கூடுதல்.

* உயர் அழுத்த, தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 35 பைசா மட்டுமே அதிகம்.

* உயர் அழுத்த வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு40 பைசா மட்டுமே அதிகம்.

* நிலையான கட்டணங்கள் கிலோவாட் ஒன்றுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.3 முதல் 27 வரை மட்டுமே கூடுதல்.

The post ஜூலை 1ம் தேதி முதல் அமல் தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வு: மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: