அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அதிர்ச்சி

வாஷிங்டன்,அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக பாதுகாப்பு பணியில் இருருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் தற்போது நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: