தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி

கிருஷ்ணகிரி: தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுகுறிக்கி கிராமத்தில் நடந்த காலபைரவர் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தனி நபர்களை தாக்கிப் பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குறிப்பாக, வடமாநிலங்கள் போல் தற்போது தமிழ்நாட்டிலும் தனிநபர்களை பா.ஜ.க.வினர் தாக்கி பேச தொடங்கியதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுத்துறையில் ஆய்வாளருக்கு பதிலாக, துணை காவல் கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். சென்னை போன்ற பெருநகரங்களில் ஐஜி அந்துஸ்து உள்ள அலுவலர்களை நியமித்து வலிமைப்படுத்த வேண்டும்.

தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை வழங்க மறுக்கும் கா்நாடகா அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் காந்திய வழியில் போராட தயாராக உள்ளது. அண்ணாமலை என் மீது தொடுத்த விமர்சனங்களால், காங்கிரஸ் கட்சி வலுப்பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து அவர் என் மீது தனிநபர் தாக்குதல் நடத்த வேண்டும், அதன் மூலம் காங்கிரஸ் கட்சி மேலும் வலிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post தனிநபர்களை தாக்கி பேசுவது பா.ஜ.க.வினருக்கு பழக்கப்பட்ட ஒன்று: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: