சிதம்பரம், ஜூலை 12: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன உற்சவ விழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. 4ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, 5ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, 6ம் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதி உலா (தெருவடைச் சான்), 8ம் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 9ம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 10ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெற்றது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
அதிகாலை சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 4.30 மணிக்கு சித்சபையில் இருந்து புறப்பட்ட தேரில் 6.20 மணிக்கு நடராஜர் எழுந்தருளினார். நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 7.45 மணி அளவில் நடராஜர் தேரை அங்கு கூடி நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவாய நம சிவாய நம கோஷங்கள் விண்ணை பிளக்க வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை தேருக்கு முன்னால் செல்ல தேரோடும் வீதிகளில் பெண்கள் வண்ண, வண்ண கோலமிட்டு சுவாமியை வரவேற்றனர். தேரோட்டத்தையொட்டி காளியாட்டம், பரதநாட்டியமும் நடந்தது. சிவன், பார்வதி வேடமிட்ட பக்தர்களும் கைலாய வாத்திய கருவிகளின் இசைக்கு ஏற்ப நடனமாடினர். மேலும் சிறுவர் சிறுமிகளின் பரதநாட்டியம் மற்றும் பெண்கள் கும்மியடித்தும், கோலாட்டத்துடன் தேரை வரவேற்றனர்.
தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக தேர் வலம் வந்ததும், வடக்கு வீதி கஞ்சி தொட்டி முனையில் பருவதராஜ குருகுல சமூகத்தினர் முதல் மரியாதை செய்து தேருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கீழ் சன்னதி நிலைக்கு தேர் வந்தடைந்தது. தேரில் இருந்து இறங்கிய சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜரை, மாணிக்கவாசகர் எதிர்கொண்டு அழைத்து செல்லும் வைபவம் நடந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும் நகராட்சி சார்பில் நான்கு வீதிகளிலும் குடிநீர் வசதி, சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மேற்பார்வையில் நகர காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் பரணிதரன் உள்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post சிவாய நம சிவாய நம விண்ணை பிளக்க நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.