பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள்: பக்தர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை, ஜூலை 11: பெரியபாளையம், பவானி அம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரியபாளையத்தில் புகழ் பெற்ற  பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா இம்மாதம் ஜூலை 17ம் தேதி தொடங்குகிறது. இந்த விழா 14 வாரங்கள் நடைபெறும். இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமைகளில் இரவு தங்கிவிட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.

அவ்வாறு, ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை போன்ற வசதிகளை பெரியபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் செய்து தருவார்கள். ஆனால், இதுவரை தற்காலிக கழிவறைகளோ, குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டிகளோ வைக்கவில்லை. கடந்த வருடம் ஆடித்திருவிழாவிற்கு வைக்கப்பட்ட தற்காலிக கழிவறைகள், சின்டெக்ஸ் குடிநீர் தொட்டிகள் பழுதான நிலையில் அரியப்பாக்கம், ராள்ளபாடி, வடமதுரை கூட்டுச்சாலை ஆகிய பகுதிகளில் கிடக்கிறது. அதை விரைவில் சீரமைத்தும், குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகளை பக்தர்கள் வசதிக்காக வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: ஆடித்திருவிழாவையொட்டி பெரியபாளையம் கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அவர்கள் வசதிக்காக தற்காலிக கழிவறைகளை வைக்க வேண்டும். அப்போதுதான் வரும் ஆடி மாதம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். தனியார் கழிவறைகளில் அதிக அளவு பணம் வசூலிக்கிறார்கள். எனவே பெரியபாளையம் பிடிஒ அலுவலகம் சார்பில் பழுதாகி உள்ள கழிவறைகளை சீரமைக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படும் கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

The post பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள்: பக்தர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: